ஐடிசி – அமேசான் டீல்? – ஐடிசி பங்குகள் 4 நாட்களில் 11% உயர்வு!
ஐடிசி லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 11 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து தற்போது ஒரு பங்கின் மதிப்பு ரூ. 260 என்ற நிலையை எட்டியுள்ளது. கடந்த வியாழன் அன்று மட்டும் இந்த நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 4 சதவீதம் உயர்ந்து. பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், ஐடிசி யின் இ-சோப்பல் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது என்ற ஊடகங்கள் மத்தியில் ஒரு செய்தி பரவி வருகிறது. இதுவே ஐடிசி பங்குகளின் திடீர் உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
ஐடிசி நிறுவனத்தின் இ-சோப்பல் என்பது விவசாயம் மற்றும் மீன் வளர்ப்பு துறைகளில் கொள்முதல் செய்வதற்குக் கிராமப்புற விவசாயிகளை இணையம் வழியாக நேரடியாக இணைக்கும் ஒரு தலமாகும். அறுவடை நாளன்று, பயிர்களை முந்தைய நாள் இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்குக் கொள்முதல் செய்கிறது இந்நிறுவனம். இதன் மூலம் கிராம வணிகர்களிடம் இருந்து கிடைக்கும் விலையை விடக் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்கிறது ஐடிசி. நுகர்வோர் பொருட்கள், விதைகள், உரங்கள் மற்றும் பிற பொருட்களை ஆர்டர் செய்யவும் விவசாயிகள் இ-சோப்பல் தளத்தைப் பயன்படுத்துகின்றனர்.
இ-சோப்பல் ஐடிசி க்கு சுமார் 6-10 சதவிகித சேமிப்பை அளிப்பது மட்டுமல்லாமல் விவசாயிகளின் உற்பத்தித்திறனை 10-25 சதவிகிதம் அதிகரிக்கின்றது. இதனால் இ-சோப்பல் ஒட்டுமொத்தமாக 50 சதவிகிதம் வரை ஐடிசி க்கு அதிக .வருமானத்தைத் தருகிறது. வரும் நாட்களில் ஐடிசி லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளின் சராசரி விலை இலக்கு ரூ .266 எனவும், அதிகபட்ச விலை இலக்கு ரூ. 345 ஆகவும், குறைந்த விலை இலக்கு ரூ .198 ஆகவும் இருக்கலாம் என்று ஆய்வாளர்களால் கணித்துள்ளனர்.