ஜுன் 6 ஆம் தேதி பங்குதாரர்களை சந்திக்கும் ஐடிசி..,
சிகரெட் முதல் பிஸ்கட் வரை பல பொருட்களை உற்பத்தி செய்து அசத்தி வரும் ஐடிசி நிறுவனம் வரும் ஜூன் 6 ஆம் தேதி தனது நிறுவனத்தின் பங்குதாரர்களை சந்திக்க ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த சந்திப்பின்போது ஐடிசி லிமிட்டட் நிறுவனத்தில் இருந்து ஐடிசி ஹோட்டல்ஸ் நிறுவனத்தை பிரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. குறிப்பிட்ட அந்த தேதியில் இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு இந்த கூட்டம் மின் வழியில் நடைபெற இருக்கிறது. இப்படி ஒரு கூட்டத்தை நடத்தியே ஆகவேண்டும் என்று தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஆணையிட்டிருந்தது. கடந்தாண்டு ஆகஸ்ட்டில் நடந்த இயக்குநர்கள் அளவிலான கூட்டத்தில் ஐடிசி நிறுவனத்தின் 10 பங்குகளை வைத்திருப்பவருக்கு 1 ஐடிசி ஹோட்டல் பங்குகளை அளிக்க முடிவெடுக்கப்பட்டது. பங்குதாரர்கள் சந்திப்பு நடந்து முடிந்ததில் இருந்து 15 மாதங்களில் பங்குச்சந்தைக்குள் ஐடிசி ஹோட்டல்ஸ் நிறுவனம் இறங்க இருக்கிறது.கொல்கத்தாவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் ஹோட்டல் நிறுவனமான ஐடிசி ஹோட்டல்ஸ் நிறுவனம் , விரைவில் மூலதனத்தை அதிகப்படுத்திவிட்டு கடன்களை குறைக்க இருக்கிறது.
பங்குதாரர்களை சந்தித்த பிறகு எவ்வளவு பங்குகளை அளிப்பது என்பது குறித்து ஐடிசி நிறுவனம் இறுதி முடிவெடுக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. புதன்கிழமை பங்குச்சந்தை முடியும் போது ஒரு பங்கின் விலை தேசிய பங்குச்சந்தையில் 429 ரூபாய் 40 பைசாவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.