நெட்ஃபிளிக்சை வாங்க கட்டம் கட்டிய ஜெஃப் பெசாஸ்…
இன்று பலரின் வீடுகளில் தவிர்க்க முடியாத ஒரு ஸ்ட்ரீமிங் செயலியாக உள்ள நெட்பிளிக்ஸ் செயலி ஒரு காலகட்டத்தில் டிவிடிகளை வாடகைக்கு அளித்து வந்தது. 1997ம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த நிறுவனத்தை அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் 1998ம் ஆண்டிலேயே வாங்க முயற்சி செய்துள்ளார். நிறுவனம் தொடங்கிய ஓராண்டில் அதாவது 1998-ல் 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற தொகைக்கு நெட்பிளிக்சை ஜெஃப் வாங்க திட்டமிட்டிருந்தார். இதுபற்றிய ருசிகர தகவல்களை நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான Marc Randolph தனது லிங்கிடு இன் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நிறுவனம் தொடங்கிய 12 மாதங்களுக்குள் அத்தனை பெரிய தொகையை அளிக்க அமேசான் முன் வந்தபோதிலும் விற்க முன் வரவில்லை என்றும் மார்க் தெரிவித்துள்ளார். அந்த காலகட்டத்தில் Marc Randolph மற்றும் Reed Hastings ஆகியோரிடம் முழு பங்கு மதிப்பும் இருந்தது. அதாவது Reed Hastings வசம் 70 விழுக்காடும், மார்க் வசம் 30 விழுக்காடு பங்குகளும் இருந்தன. தாம்பரம்,பூந்தமல்லி,அண்ணாநகர் பக்கம் வீடு வாங்காமல் விட்டுவிட்டோமே என்று புலம்புவோரைப் போல, அன்றே அந்த தொகையை ஏற்றிருக்கலாம் என்ற தனது ஆதங்கத்தையும் மார்க் தனது லிங்க்டு இன் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.