ஜியோவைத் தொடர்ந்து வோடஃபோன்,ஏர்டெலும்…
அண்மையில் சிம்கார்டு ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துவதாக ஜியோ தனது அதிகாரபூர்வ பக்கத்தில் அறிவித்திருந்தது. இந்த நிலையில் அந்நிறுவனத்தைத் தொடர்ந்து, போட்டி நிறுவனங்களான வோடஃபோன், ஏர்டெலும் விலைகளை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளன. இந்த புதிய விலை உயர்வு வரும் 4 ஆம் தேதி முதல் அமலாக இருக்கிறது. அறிமுக பிளான்கள் சற்று குறைவாக இருக்கும் என்றும், 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை மேம்படுத்த இருப்பதாகவும் வோடஃபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு தொலை தொடர்பு நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. இதன் மூலம் தனிநபரிடம் இருந்து நிறுவனங்கள் வசூலிக்கும் சரசரி தொகை உயர இருக்கிறது. 5 ஜி சேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரும் நோக்கில் இந்த விலையேற்றம் அமைய இருக்கிறது. 179 ரூபாயாக இருந்த அன்லிமிட்டட் காலிங் வசதி இனி 199 ரூபாயாக இருக்கும். அதுவும் 28 நாட்களுக்கு மட்டுமே. இப்படி ரீசார்ஜ் செய்தால் 2 ஜிபி நெட், அன்லிமிட்டட் காலிங், 300 எஸ்எம்எஸ் இலவசமாகும். இதேபோல் 84 நாட்களுக்கு வரும் தற்போதைய பிளான் 459 ரூபாயாக இருக்கும் நிலையில் இனி 509 ரூபாய் வசூலிக்கப்பட இருக்கிறது. ஒரு ஜிபி மட்டும் டேட்டா வேண்டுமெனில் இதுவரை 19 ரூபாயாக இருந்த அதன் விலை இனி 22 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. கடந்த புதன்கிழமை நடந்த ஏலத்தில் வோடஃபோன் 3510 கோடி ரூபாய் மதிப்புள்ள அலைக்கற்றையை வாங்கியுள்ளது. 900 மெகா ஹர்ட்ஸ் அளவுள்ள அலைக்கற்றைகள் மூலம் 4ஜி சேவையை மேம்படுத்தி, வாடிக்கையாளர்கள் வெளியேற்றம் தடுக்கப்படும் என்று வோடஃபோன் நிறுவன அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.