செயற்கை நுண்ணறிவை நம்பி களமிறங்கும் ஜியோ..
ஜியோ பினான்சியல் சர்வீசஸ் என்ற நிதி நிறுவனம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு கே.வி.காமத் தலைமை வகிக்கிறார். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி நிதி சேவைகளை வழங்க ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது. குறிப்பாக கிராமபுற மக்கள் குறித்த புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டு, பின்னர் அதில் இருந்து கடன் பெற்றால் திரும்பப் பெற வாய்ப்புள்ளவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு அதன் அடிப்படையில் வணிகத்தை விரிவுபடுத்த ஜியோ திட்டமிட்டு இருக்கிறது. ஐசிஐசிஐ வங்கியை நிறுவியதில் இருந்து காமத் பெற்றுள்ள அனுபவத்தை ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்திலும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு, நிதித்துறை சேவைகளை அளிப்பது புதிய அனுகுமுறையாக இருக்கிறது. பிளாக் ராக் என்ற நிறுவனத்துடன் ஏற்கனவே ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் கைகோர்த்திருக்கிறது. காமத் மட்டுமின்றி,ஹிதேஷ் சேத்தியா ,மனீஷ் சிங் ஆகிய 3 பேரும் ஏற்கனவே Iciciவங்கியில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள்,இவர்கள் தற்போது ஜியோ நிதி சேவைகளுக்கு பணியாற்ற இருக்கின்றனர்.
செயற்கை நுண்ணறிவு தரவுகளை பகுப்பாய்வு செய்ய பிரத்யேக தொழில்நுட்பக் குழுவையும் ஜியோ களமிறக்கியுள்ளது.ஏற்கனவே சில துறைகளில் பாட்ஸ்களை களமிறக்கியுள்ளதாகவும் ஜியோ நிறுவனம் கூறியுள்ளது. ஜியோ செயலி மூலம் தனிநபர் கடனை மும்பையில் வழங்கும் சேவையும் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. சுயதொழில் தொடங்குவோர்,சிறுவணிகர்கள்,வாகன கடன்,வீட்டு லோன்களும் ஜியோ வழங்க திட்டமிட்டு உள்ளது.ஏற்கனவே வாடிக்கையாளர்களை நன்கு அறிந்த ஜியோ, எளிதாக மக்களிடம் கடன் கொடுத்து ,குறைவான ரிஸ்கில் பணத்தை பெறுவார்கள் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.