JLR CEO விலகல்
ஜாகுவார் லேண்ட் ரோவர்: தலைமைச் செயல் அதிகாரி ஏட்ரியன் மார்டெல் ஓய்வு – பின்னணி விவரம் இது தான்..
ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஏட்ரியன் மார்டெல் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் விதிக்கப்படும் அதிகப்படியான வரிகள், ஜாகுவார் பிராண்டின் சர்ச்சைக்குரிய மறுசீரமைப்பு போன்ற சவால்களை நிறுவனம் எதிர்கொண்டு வரும் நிலையில் இந்த முடிவு வந்துள்ளது.
“மூன்று ஆண்டுகள் தலைமைச் செயல் அதிகாரியாக, 35 ஆண்டுகள் JLR நிறுவனத்தில் பணிபுரிந்த பிறகு ஓய்வு பெற அட்ரியன் மார்டெல் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்” என நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவரது பதவியில் ஒரு தமிழர் அறிவிக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது.
மார்டெல்லின் விலகல் ரெனால்ட் SA, ஸ்டெல்லண்டிஸ் NV, வால்வோ கார் AB போன்ற பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் நடந்த சமீபத்திய தலைமை மாற்றங்களின் தொடர்ச்சியாகும்.
சீனாவில் விற்பனை வீழ்ச்சி, ஐரோப்பாவில் மின்சார வாகனங்களுக்கான குறைந்த தேவை, அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்த வர்த்தகக் கட்டுப்பாடுகள் என வாகனத் துறை பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது.
இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான JLR, அமெரிக்க வரி நிச்சயமற்ற தன்மையின் உச்சக்கட்டத்தில் லாப வழிகாட்டுதலை வெளியிடாத பல கார் தயாரிப்பாளர்களில் ஒன்றாகும்.
ரேஞ்ச் ரோவர், லேண்ட் ரோவர் எஸ்யூவிகளை தயாரிக்கும் JLR-க்கு அமெரிக்காவில் எந்த தொழிற்சாலையும் இல்லை.
கடந்த ஆண்டு ஜாகுவார் பிராண்டை முழு மின்சார வாகன பிராண்டாக மாற்றும் வகையில் வெளியிடப்பட்ட ஒரு விளம்பர வீடியோ கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. புதிய மாடல்கள் தயாராகும் வரை ஜாகுவார் எந்த காரையும் உற்பத்தி செய்யவில்லை.
மார்டெல் பதவிக் காலத்தில், JLR தனது அனைத்து மாடல்களுக்கும் பத்தாண்டு இறுதிக்குள் முழு மின்சார மாற்று வசதிகளை உருவாக்கும் வியூகத்தை தீவிரமாக செயல்படுத்தியது.
முதல் மின்சார வாகனமான மின்சார ரேஞ்ச் ரோவரை அறிமுகப்படுத்தவும் தயாராகி வருகிறது. ஐக்கிய ராஜ்யத்தில் திருடர்களின் இலக்காக மாறிய தனது எஸ்யூவி வாகனங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் தலைமைச் செயல் அதிகாரி அதிக முதலீடு செய்தார்.
