அமெரிக்க எச் – 4 (H4-VISA) விசாதாரர்களின் பணி அங்கீகார வழக்கில் தீர்ப்பு !
அமெரிக்காவில் எச்-4 விசாதாரர்களின் பணி அங்கீகாரத்தை தானியங்கி முறையில் நீட்டிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வோருக்கு எச்-1 விசா வழங்கப்படுகிறது. இதேபோல் எச்-1 விசாதாரர்களின் கணவன் அல்லது மனைவி அமெரிக்காவில் பணி செய்திட எச்-4 விசா வழங்கப்படுகிறது.
முந்தைய அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த விசாவை தற்போது 90,000 க்கும் மேற்பட்டோர் வைத்துள்ளனர் . இவர்களின் பெரும்பாலானோர் இந்திய பெண்கள். இதற்கிடையே முந்தைய அதிபர் டிரம்ப் நிர்வாகம் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பறி போவதாகக் கூறி எச்-4 விசாதாரர்களின் தானியங்கி பணி அங்கீகார நீட்டிப்பு தடைவிதித்தது.
பாதிக்கப்பட்ட எச் -4 வீசாதாரர்கள் சார்பில் அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர், இதையடுத்து இது தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று இந்திய வம்சாவளியினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.