டாடாவுக்கு போட்டியாக ஜெஎஸ்டபிள்யுவின் கார்..
சீனாவின் சியாக் மோட்டார் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவின் ஜேஎஸ்டபிள்யுவுடன் இணைந்து, புதிய மின்சார கார்களை உற்பத்தி செய்து வருகிறது. இது டாடாவின் கர்வ் ஈவி கார்களுக்கு போட்டியாக அறிமுகமாக இருக்கிறது. இந்தியாவில் இப்போது வரும் பண்டிகை காலத்தில் இந்த புதிய கார்கள் சந்தைக்கு வரும் என்று கூறப்படுகிறது. 20 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இந்த காரின் விலை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கிராஸ்ஓவர் யுடிலிட்டி வாகனமான சியுவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. புதிய எம்ஜி மின்சார கார் 50.3 கிலோவாட் பேட்டரி பேக்கில் வரும் என்றும் கூறப்படுகிறது. தற்போதுள்ள zs ரக கார்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 461 கிலோமீட்டர் செல்கிறது. புதிய கார் எடை குறைவு என்பதால் இன்னும் கூடுதல் தூரம் செல்லும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 176 ஹார்ஸ் பவர், 280 நானோ மீட்டர் டார்க் உற்பத்தி செய்யும் என்று கூறப்படுகிறது. தற்போது வரை எம்ஜி நிறுவனம் zs மற்றும் காமட் ஈவி ஆகிய கார்களை விற்று வருகிறது. அந்நிறுவனத்தின் விற்பனையில் 35 விழுக்காடு மின்சார கார்களாக உள்ளது. இந்தியாவில் zs ரக கார்கள் 500க்கும் அதிகமாக விற்றுள்ளன. 2024 நிதியாண்டின் முதல் காலாண்டுக்கும் இரண்டாம் காலாண்டு விற்பனைக்கும் இடையே 95 விழுக்காடு உயர்வு காணப்படுகிறது. தற்போது வரை மின்சார கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எம்ஜியின் புதிய கார்கள் டாடா மோட்டர்ஸின் சந்தைக்கு போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.