கோட்டக் மஹிந்திரா AMC ‘நிலையான முதிர்வு திட்டங்கள்’ தொடங்க தடை !
கோட்டக் மஹிந்திரா சொத்து மேலாண்மை நிறுவனம் (AMC) வரும் ஆறு மாதங்களுக்கு புதிய பிக்சட் – மெச்சூரிட்டி திட்டங்களைத் தொடங்குவதை செபி தடை செய்திருக்கிறது. விதிமுறைகள் மற்றும் சுற்றறிக்கைகளை மீறியதாக கோட்டக் மஹிந்திரா ஏ.எம்.சி நிறுவனத்துக்கு 50லட்சம் ரூபாயை அபராதமாக விதித்திருக்கிறது செபி. “கோட்டக் ஏ.எம்.சி நிறுவனமானது தனது ஆறு பிக்சட்-மெச்சூரிட்டி திட்டங்களின் யூனிட் ஹோல்டர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட முதலீட்டு மேலாண்மைக் கட்டணம் மற்றும் ஆலோசனைக் கட்டணங்களின் ஒரு பகுதியை திட்டம் முடிவடைந்த தேதியிலிருந்து, திருப்பியளிக்கும் தேதி வரை ஆண்டுக்கு 15% வட்டி விகிதத்தில் திருப்பித் தரவேண்டும்” என்று செபி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
கோட்டக் மஹிந்திரா ஏ எம் சி நவம்பர், 2013 இல் பிக்சட்-மெச்சூரிட்டி தொடர் வரிசை 127 மற்றும் டிசம்பர் 2015 இல் எஃப்எம்பி தொடர்வரிசை 183 ஐயும் அறிமுகப்படுத்தியது, இந்தத் திட்டங்கள் முறையே ஏப்ரல் 8, 2019 மற்றும் ஏப்ரல் 10, 2019 அன்று முதிர்ச்சியடைந்தன, இந்தத் திட்டங்களின் கீழ் “கொண்டி இன்ஃப்ரா பவர் & மல்டிவென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்” மற்றும் “எடிசன் யுடிலிட்டி ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட்” ஆகியவற்றின் பூஜ்ஜிய கூப்பன் மாற்றமுடியாத கடன் பத்திரங்களில் (ZCNCDs) முதலீடு செய்யப்பட்டிருந்தது. இந்த இரண்டு நிறுவனங்களும் “எஸ்ஸெல்” குழுமத்தைச் சேர்ந்தவை, எஸ்ஸெல் குழுமமானது, ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் (ZEEL) மற்றும் சில நிறுவனங்களோடு சேர்த்து “ஜீ குரூப் நிறுவனங்கள்” என்று அழைக்கப்படுகிறது.
ZEEL இன் பங்கு விலை ஜனவரி 25, 2019 அன்று கடும் வீழ்ச்சியடைந்தது, பங்குகளின் பிணை மதிப்பானது 1.50 என்ற குறைந்தபட்சமாகத் தேவைப்படும் மதிப்புக்கும் கீழே சரிந்தது, கோட்டக் மஹிந்திராவின் முதலீட்டுகளை பாதுகாக்க ZEEL பங்குதாரர்களுக்கு மார்ஜின் அழைப்பு விடுக்கப்பட்ட போது கூடுதல் பிணைகளை வழங்குவதில் தங்கள் இயலாமையை அறிவித்தனர், பின்னர், கோடக் மஹிந்திரா ஏ.எம்.சி, ஏப்ரல் 6, 2019 அன்று ஒவ்வொரு வழங்குநர்களுடனும் தனித்தனியாக ஒப்பந்தங்களை செய்து கொண்டது. அதன் அடிப்படையில், செப்டம்பர் 30, 2019 வரை ZCNCD க்களின் முதிர்ச்சி காலத்தை நீட்டித்தது.
செபி சட்டம், 1992 ன் படியும், ம்யூசுவல் ஃபண்ட் விதி 1996 ன் படியும் சில விதிமுறைகளை மீறியுள்ளதில் முதற்பார்வையில் கோட்டக் மஹிந்திரா ஏ எம் சி உள்ளதாக தனது அறிக்கை மற்றும் சுற்றறிக்கைகளில் செபி தெரிவித்துள்ளது. ஆனால், விசாரணைக்குப் பிந்தைய தகவல் சமர்ப்பித்தலின் போது நிதி நிறுவனமானது மேலும் நான்கு எஃப்.எம்.பி திட்டங்களின் தொடர்வரிசை (187,189, 193 மற்றும் 194) பங்களிப்பு செய்துள்ளதாக செய்துள்ளதாக தெரிவித்தது.மேலும் பல்வேறு காரணங்களுக்காக செபி அடுத்த 6 மாதங்களுக்கு எந்தவித நிலையான முதிர்வு திட்டங்கள் எதுவும் இந்நிறுவனம் வெளியிட தடை விதித்துள்ளது. கோட்டக் மஹிந்திராவின் அறிவிப்பு ஒன்றில், அனைத்து முதலீட்டாளர்களுக்கும் அவர்களது முதலீட்டுடன் பொருந்தக்கூடிய வட்டியுடன் செப்டம்பர் 2019 -ல் முழுமையாக திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது, கோட்டக் மஹிந்திரா AMC முதலீட்டாளர் ஆர்வத்தை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது என்றும் கோட்டக் மஹிந்திரா குழு செய்தித் தொடர்பாளர் கூறினார்.