லேப்டாப் இறக்குமதிக்கு தடை-அமெரிக்க அதிகாரிகள் அதிருப்தி
இந்தியாவுக்கான அமெரிக்க தூதரான எரிக் கார்செட்டி அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், டெல்லியும்-வாஷிங்டனும் இணைந்து பிரச்னை இல்லாத வர்த்தகம் செய்ய ஆலோசிப்பதாக கூறினார். இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தங்களின்படி சுதந்திரமான வர்த்தகம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மிகப்பெரிய சப்ளையராக இந்தியா திகழ இது ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் லேப்டாப்களுக்கு உரிய வரியும் உரிமமும் இருக்கவேண்டும் என்றும் அப்படி இல்லையெனில் கூடுதல் வரி வசூலிக்கப்படும் என்றும் இந்திய அரசு அறிவித்து சில மாத அவகாசமும் அளித்துள்ள நிலையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பேசியிருப்பது கவனம் ஈர்த்திருக்கிறது. இந்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். என்ன காரணத்துக்காக இந்த திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கம் கேட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் வர்த்தகம் செய்ய போதுமான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கேட்டுள்ளார். இந்தியாவில் வணிகம் மேற்கொள்ள போதுமான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று எலான் மஸ்க் அண்மையில் மத்திய அரசை கேட்டிருந்தார். இதையும் கார்செட்டி சுட்டிக்காட்டி பேசியுள்ளார். இந்தியாவில் வணிகம் செய்ய இறக்குமதி வரியை குறைப்பதாக வெளியான தகவலை கார்செட்டி வரவேற்றுள்ளார். இந்தியாவுக்கு வர உள்ள அமெரிக்க அதிபரின் பயணத்தின்போது சுகாதாரம்,பொருளாதாரம்,பருவநிலை மாற்றம் மற்றும் மகளிருக்கு அதிகாரமளித்தல் ஆகியவை முக்கிய அம்சங்களாக விவாதிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.