எல்ஐசி யில் அன்னிய முதலீட்டாளர்கள் ! – முழு விவரம் இதோ !
நாட்டின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி தனது புதிய பங்குகளை வெளியிட இருக்கும் நிலையில், அதன் பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் வாங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர இந்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இது குறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது, எல்ஐசி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டின் போது, அதன் பங்குகளில் 20% வரை அன்னிய முதலீட்டாளர்கள் வாங்க வகை செய்யும் விதமாக சட்டத் திருத்தம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் நாட்டின் மிகப்பெரிய ஐபிஓ வில் அன்னிய முதலீட்டாளர்களும் பங்கேற்கலாம்.
இந்த சட்டத் திருத்தத்தை கொண்டு வரும் பட்சத்தில், அன்னிய முதலீட்டாளர்கள் அரசின் அனுமதி இன்றி, ‘ஆட்டோமேட்டிக் ரூட்’ வாயிலாகவே எல்ஐசி நிறுவனப் பங்குகளை வாங்கிக் கொள்ள முடியும். புதுடெல்லியில் அரசு அதிகாரிகள் இந்த திட்டத்தைப் பற்றி கலந்து பேசியுள்ளனர்.
பெரும்பாலான இந்திய காப்பீட்டு நிறுவனங்களில் 74% வரை அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது என்ற போதிலும், இந்த விதி எல்ஐசி க்கு பொருந்தாது, ஏனெனில் இது பாராளுமன்றத்தின் சட்ட விதிகளால் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு நிறுவனம் ஆகும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் வரையறைப்படி அந்நிய நேரடி முதலீடு (FDI) என்பது பட்டியலிடப்பட்ட நிறுவனத்தில் 10% அல்லது அதற்கு மேற்பட்ட பங்குகளை வெளிநாட்டில் உள்ள ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் வாங்குவது, அல்லது பட்டியலிடப்படாத நிறுவனத்தில் செய்யப்படும் வெளிநாட்டு முதலீடு ஆகும். எனவே எல்ஐசி யில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால் உலகளாவிய நிதிகளை ஐபிஓ வில் பங்கேற்க அனுமதிப்பது மட்டுமல்லாமல் பட்டியலிடப்பட்ட பிறகு குறிப்பிடத்தக்க பங்குகளை வாங்குவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, மார்ச் 2022 வரையிலான நிதியாண்டுக்கான பட்ஜெட் பற்றாக்குறை இலக்கை அடைவதற்கு அரசு நடத்தும் காப்பீட்டு நிறுவனத்தின் ஐபிஓ விலிருந்து கிடைக்கும் பணத்தை நம்பியுள்ளது. எல்ஐசி ஐ.பி.ஓ மூலம் இந்திய அரசு 8 ட்ரில்லியன் ரூபாய் முதல் 10 ட்ரில்லியன் ரூபாய் வரை திரட்டலாம் என்று (134 பில்லியன் டாலர்) மதிப்பீடு செய்திருக்கிறது. . மேலும் 5% – 10% பங்கு விற்பனையையும் பரிசீலித்து வருகிறது, இதன் மூலம் 400 பில்லியன் ரூபாய் முதல் 1 ட்ரில்லியன் ரூபாய் வரை கூடுதலாகத் திரட்ட முடியும் என்று ப்ளூம்பெர்க் அறிவித்துள்ளது.
இதற்கு பாராளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். இதையடுத்தே, அரசு இதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது. எல்ஐசி யின் புதிய பங்கு வெளியீட்டை, அடுத்த மார்ச் மாதத்துக்கு உள்ளாக நடத்த வேண்டும் என அரசு முயற்சிக்கிறது.