ஐடிபிஐயில் எல்ஐசி பங்குகள் தொடரும்..
திவால் நிலையில் இருந்த ஐடிபிஐ வங்கியை குறுக்கே புகுந்து கட்டையை வீசி மீட்டெடுக்கும் முயற்சியில் அண்மையில் எல்ஐசி நிறுவனம் ஈடுபட்டது. இந்த நிலையில் ஐடிபிஐ வங்கியின் மொத்த பங்குகளில் மத்திய அரசுக்கும்,எல்ஐசிக்கும் சேர்த்து 94.71% பங்குகள் உள்ளன.இதில் எல்ஐசியின் பங்கு மட்டும் 49.24%ஆக இருக்கிறது. பெரும்பாலான பங்குகளை விற்றுவிட்டாலும் கூட, எல்ஐசியின் பங்கு ஐடிபிஐயில் தொடரும் என்று எல்ஐசி நிறுவனத்தின் தலைவர் சித்தார்தா மொஹாந்தி தெரிவித்துள்ளார்.எல்ஐசியின் பிடி வலுவாக இருப்பதாக கூறியுள்ள மொஹாந்தி,ஐடிபிஐ வங்கியின் மொத்த பங்குகளை விற்க வேண்டுமா என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார். ஐடிபிஐ வங்கியில் எல்ஐசியின் பங்குகள் குறித்து பிரதமர் மோடியே பாராட்டியுள்ளதாக கூறியுள்ள மொஹாந்தி,நாட்டின் நலனுக்காக அனைத்து தரப்பினரையும் பாதிக்காத வகையில் முடிவு எடுக்கப்படும் என்றார் 23 ஆண்டுகளாக காப்பீட்டுத்துறையில் போட்டி இருந்து வந்தாலும் எல்ஐசி நிறுவனத்தின் இலக்கு லாபத்தை குறியாக கொண்டது என்று அவர் கூறினார்.புதுப்புது காப்பீட்டு திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்கள் நன்மதிப்பை எல்ஐசி பெற்று வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். கொரோனாவுக்கு பிறகு காப்பீடு எடுப்போரின் விகிதம் உயர்ந்திருப்பதாகவும், மற்ற காப்பீடுகளை ஒப்பிடுகையில் எல்ஐசி காப்பீடு விலை குறைவாகவே இருப்பதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். அதானி குழுமத்தில் போட்ட பணம் நஷ்டமடைந்துவிட்டதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு,இதுவரை அப்படி நடந்ததே இல்லை என்று அவர் குறிப்பிட்டார். எல்ஐசி மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை இருப்பதாகவும், அதனால் அனைவரும் அதிக பாலிசிகள் எடுக்க வேண்டும் என்றும் மொஹாந்தி குறிப்பிட்டுள்ளார்.