சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு – மக்கள் அதிர்ச்சி!
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் ₹25 உயர்ந்ததால், தமிழகத்தில் சிலிண்டர் விலை 900 ரூபாயை தாண்டியது. 9 மாதங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ₹285 உயர்ந்து மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ₹1831.50 ஆக உள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை தினசரி சரி செய்யத் தொடங்கியதிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. மறுபுறம், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மாதத்திற்கு இரண்டு முறை சரி செய்யப்படுகிறது. சில நேரங்களில் இது மாதத்திற்கு 3 முறை கூட மாற்றியமைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஒரு காஸ் சிலிண்டரின் விலை 700 ரூபாயாக இருந்தது, ஆகஸ்ட் 17 அன்று 875 ரூபாய் 50 காசுகளாக அதிகரித்தது. இன்று, சிலிண்டரின் விலை மேலும் ₹25 அதிகரித்து 900 ரூபாயாக உயர்ந்துள்ளது. எனவே, இந்த ஆண்டில் மட்டும், எரிவாயு சிலிண்டர்களின் விலை ₹285 உயர்ந்துள்ளது.
எரிவாயு சிலிண்டர்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பாலும் மக்கள் வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.
சிலிண்டர் விலை உயர்வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளது. “மீண்டும் கேஸ் சிலிண்டர் விலை ₹25 ஏற்றம். சாமானிய மக்களை சுரண்டுவதில் தான் எப்போதும் யாருக்கும் சளைத்தவர் இல்லை என மோடி சொல்லாமல் சொல்கிறார். மீண்டும் மீண்டும் அதை நிரூபித்தும் வருகிறார். #IndiaAgainstBJPLoot,” என்று காங்கிரஸ் ட்வீட் செய்துள்ளது.