பற்ற வைக்கவே பயமா இருக்கு.. –பற்றி எரியும் சிலிண்டர் விலை..!!
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் வேதனையடைந்து உள்ளனர்.
வழக்கமாக மாதத்தின் முதல் நாளன்று LPG எனப்படும் வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றி அமைக்கப்படும். ஆனால், 2021 அக்டோபர் மாதத்துக்கு பிறகு சமையல் எரிவாயு உருளையின் விலை மார்ச் 10-ம் தேதி 5 மாநில தேர்தல் முடிவுகள் அறிவிகப்படும் வரை மாற்றம் செய்யப்படவில்லை.
இந்நிலையில், இன்று (22.03.2022) வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, 967 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் ரூ.917-ஆக இருந்த சமையல் எரிவாயு உருளையின் விலை தற்போது 50 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளதால் நடுத்தர, ஏழை குடும்பத்தை சேர்ந்த மக்கள் மிகவும் வேதனையடைந்துள்ளனர்.
ஏற்கனவே, பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தி அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையையும் அரசு உயர்த்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அண்மையில் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையையும் அரசு உயர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.