9 டிரில்லியன் ரூபாய் மதிப்பு திட்டங்களை எடுத்துள்ள எல்அண்ட் டி..
எல்அண்ட் டி நிறுவனம் 9 டிரில்லியன் ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை கையில் எடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான சங்கரராமன் தெரிவித்துள்ளார். அந்நிறுவனத்தின் காலாண்டு அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் பேசிய சுந்தர ராமன், 60 விழுக்காடு அளவுக்கு பணிகள் இந்தியாவில் செய்யப்பட்டுள்ளது என்றார். ஆற்றல் துறையில் மட்டும் 2 டிரில்லியன் அளவுக்கு ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
உள்கட்டமைப்புகளில் மாற்றம் மற்றும் ஆற்றல் துறையில் உருமாற்றம்தான் இந்தியாவில் அதிக கவனம் பெற்றுள்ளதாகவும், இந்தியா மட்டுமின்றி, பன்னாடுகளுக்கும் இதுவே தற்போதைய தேவையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜூன் 30ஆம் தேதி வரை 4.9 டிரில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஆர்டர்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 38 விழுக்காடு அளவுக்கு சர்வதேச ஆர்டர்கள் என்றும் கூறியுள்ளார். இது கடந்தாண்டு ஜூன் 30 ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில் 19 விழுக்காடு அதிகம் என்றும் சங்கர ராமன் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், புதிய ஆர்டர்களாக 70,936 கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டை ஒப்பிடுகையில் 8 விழுக்காடு அதிகமாகும். இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக தங்களுக்கு வரும் ஆர்டர்களின் அளவு குறைந்திருப்பதாக கூறியுள்ள இவர், இந்தியாவில் இந்த சூழல் கட்டமைப்புகளிலேயே மாற்றம் தருவதாகவும் கூறியுள்ளார். தற்போது இருக்கும் அரசியல் மாற்றங்கள் எதிர்காலத்திலும் வந்தால் அவற்றையும் சமாளிக்கும் வகையில், சவுதி அரேபியா அரசு 2030 மற்றும் 2035 ஆம் ஆண்டு வரையிலான ஆழமான திட்டங்களை தீட்டியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள திட்டங்களின் ஆர்டர்கள் எல்அண்ட் டிக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும், அதில் 5-10 விழுக்காடு அளவு மட்டுமே எல்அண்ட்டி இலக்கு நிர்ணயிப்பதாகவும் சங்கர ராமன் குறிப்பிட்டுள்ளார்.