சென்னை அருகே 2500 கோடி செலவில் பிரம்மாண்ட பேட்டரி தொழிற்சாலை – லூக்காஸ்-டி.வி.எஸ்
லூக்காஸ் டி.வி.எஸ் லிமிடெட் நிறுவனமும், அமெரிக்காவை மையமாகக் கொண்ட 24M டெக்னாலஜீஸ் நிறுவனமும் இணைந்து சென்னை அருகே “செமி சாலிட்” வகை “லித்தியம்- அயான்” பேட்டரி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை 2500 கோடி செலவில் அமைக்க உள்ளன. 2023 ஆம் நிதியாண்டின் இரண்டாம் பாதியில் தொழிற்சாலை தனது வணிக உற்பத்தியைத் துவங்கும் என்றும், துவக்கத்தில் இந்திய சந்தைக்காக பேட்டரிகள் தயாரிக்கப்படும் என்றும் “லூக்காஸ் டிவிஎஸ்” நிறுவன செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வளர்ந்து வரும் எரிசக்தி சேமிப்பு, மின்சார இயக்கம் மற்றும் அமில பேட்டரிகளுக்கான மாற்று சந்தையை ஆதரிக்கும் வண்ணம், இந்தியா முழுவதும் இத்தகைய தொழிற்சாலைகளை அமைக்க நிறுவனம் திட்டமிடுகிறது. இந்திய சந்தைக்கான “செமி சாலிட்” வகை “லித்தியம் – அயான்” பேட்டரிகளை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும் முதல் நிறுவனமாக “லூக்காஸ்-டி.வி.எஸ்” இருக்கும் என்று நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது.
“அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம், ஆகவேதான் நாங்கள் 24M நிறுவனத்தை எங்கள் பங்குதாரராகத் தேர்வு செய்தோம், அவர்களது புதுமையான தொழில்நுட்பம், விலைகுறைந்த மின்னியக்கம், அமில பேட்டரிகளுக்கான முன்னணி மாற்று, உயர் தரமான தீர்வுகள் மற்றும் மிகச்சிறந்த பாதுகாப்பு வசதிகளோடு கூடிய மின் சேமிப்பு ஆற்றலுக்கான சேவைகளை வழங்க எங்களுக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று லூகாஸ் டிவிஎஸ்.நிறுவனத்தின் தலைமை மேலாண்மை இயக்குனர் டி.கே.பாலாஜி தெரிவித்தார்.
தற்போது வெளிவந்துகொண்டிருக்கும் பெரும்பாலான இரு சக்கர வாகனங்கள், முச்சக்கர வாகனங்கள், மற்றும் கார்களில் லித்தியம்-அயான் வகை பேட்டரிகளே பொருத்தப்பட்டு வருகிறது. இத்தகைய பேட்டரி தற்சமயம் வரை இறக்குமதி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க்கது.