அமெரிக்காவில் லூபின் ஆதிக்கம்?
இந்தியாவின் மிகப் பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லூபின் நிறுவனம், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கோரல் ஸ்பிரிங்ஸில் 25 கோடி டாலர் முதலீட்டில் ஒரு புதிய உற்பத்தி மையத்தை அமைக்கப்போவதாக தெரிவித்துள்ளது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உள்கட்டமைப்பு மற்றும் மூலதனச் செலவுகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், அடுத்த ஐந்து வருடங்களில் 25 கோடி டாலர்களை செலவிட திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய உற்பத்தி மையம், 25-க்கும் மேற்பட்ட முக்கிய சுவாச நோய்களுக்கான மருந்துகளை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கும் என்று இந்நிறுவனம் கூறியுள்ளது.
ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான அல்புடெரோல் இன்ஹேலர்கள் போன்ற உபகரணங்களையும் இந்த மையம் உற்பத்தி செய்யும் என்று கூறியுள்ளது.
அமெரிக்காவில் உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துவதன் மூலமும், விநியோகச் சங்கிலியை பரந்துபடச் செய்வதன் மூலமும், மருந்து தேவைகளை பூர்த்தி செய்து, உலக அளவில், சுவாச நோய்களுக்கான மருந்து உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக தொடர முடியும் எனக் கூறியுள்ளது.
புளோரிடாவின் ப்ரோவர்ட் கவுண்டியில் 2030ஆம் ஆண்டுக்குள் இந்த உற்பத்தி மையம், 200-க்கும் மேற்பட்ட திறன் மிகு வேலைகளை உருவாக்க உள்ளது.
புளோரிடாவில் ஏற்கனவே உள்ள லுபின் தொழிற்சாலையை ஒட்டி, இந்த புதிய உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளது. 70,000 சதுர அடி பரப்பளவிலான இந்த விரிவாக்கத்தை செயல்படுத்த, லூபின் 5 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை கையகப்படுத்தியுள்ளது.
புதிய முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களை ஊக்குவிக்கும் விதமாக, புளோரிடா மாகாண அரசு, லூபின் நிறுவனத்திற்கு வரிச் சலுகைகள் மற்றும் மானியங்களை அளிக்க உள்ளது.
