உணவு விநியோக மேலாண்மையில் பெரிய சீர்திருத்தங்கள் தேவை
விலைவாசி உயர்வில் மிகமுக்கிய பங்கு வகிப்பது உணவுப்பொருட்கள் விலையேற்றம்தான். திடீர் திடீரென எகிறும் உணவுப்பொருட்கள் விலைகளால் பணவீக்கம் அதிகரிக்கிறது. இதனால் உணவுத்துறைக்கு என ஒரு வலுவான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பருவமழை காலங்களில் இந்த வகை விலையேற்றங்கள் அதிகம் இருக்கிறது என்கிறார்கள் ரிசர்வ் வங்கி ஆய்வாளர்கள். காய்கனிகளை வாங்கிய பிறகு அதனை சேமித்து வைப்பது,பதப்படுத்துவது உள்ளிட்ட துறைகளில் போதுமான வசதிகள் இன்னும் செய்யப்படவேண்டும் என்றும் அந்த வங்கியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மாதந்தோறும் ரசிர்வ் வங்கி தனது பொருளாதார நிலை அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். அதில் இந்த தரவுகளை அவர்கள் தெரிவித்துள்ளனர். முக்கியமான பெரிய சீர்திருத்தங்களை செய்வதன் மூலம் விவசாயிகளின் உற்பத்தி அளவும் அதிகரிக்கும், அதே நேரம் வாடிக்கையாளர்களுக்கு சீரான விலையி்ல் உணவுப்பொருட்கள் கிடைக்கும் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. போதுமான குளிர்சாதன சேமிப்புக் கிடங்குகள் இல்லை என்று ரிசர்வ் வங்கி பல மாதங்களாக கூறி வருகிறது. பருவம் தவறி பெய்த மழை மற்றும் கடும் வறட்சியால் தக்காளியின் விலை 400 விழுக்காடு வரை உயர்ந்ததை சுட்டிக்காட்டியுள்ள ரிசர்வ் வங்கி,ஜூலையில் பணவீக்கம் அதிகரித்ததற்கு தக்காளியும் ஒரு காரணம் என்று சுட்டிக்காட்டியது. இந்தியாவில் விரைவில் பொதுத்தேர்தல் வர இருக்கும் சூழலில் அண்மையில்தான் பட்ஜெட்டில் இருந்து குறிப்பிட்ட தொகை மற்ற துறைகளுக்கு கூடுதலாக ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.ஜூலை செப்டம்பர் காலகட்டத்தில் பணவீக்கம் அளவும் 2 முதல் 6 விழுக்காட்டுக்குள் இருக்கும் என்று ஏற்கனவே ரிசர்வ் வங்கி கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.