கச்சா எண்ணெய் விலையை 30 டாலர் ஆக்குங்க!!!!
ரஷ்யாவில் இருந்து தோண்டி எடுக்கப்படும் கச்சா எண்ணெயின் ஒரு பேரல் விலையை 60 டாலர்களாக அதிகபட்சம் விற்கவேண்டும் என்று ஜி7 நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா விலை நிர்ணயம் செய்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து பல்வேறு நாடுகளும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் ரஷ்யாவின் போர் தாக்குதலுக்கு ஆளாகி வரும் உக்ரைனும் தங்கள் கருத்தை வெளியிட்டுள்ளனர். அதாவது ரஷ்ய கச்சா எண்ணெய் விலை அதிகபட்சமே 30டாலர்கள்தான் விற்க வேண்டும் என்பது உக்ரைன் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் கருத்தாக உள்ளது. சர்வதேச அளவில் பொருளாதார தடை விதிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரஷ்யாவின் கச்சா எண்ணெயின் விலையை தற்போது நிர்ணயித்துள்ள 60 டாலர்களுக்கு பதிலாக 30 டாலர்களாக குறைத்தால், ரஷ்யாவால் போரை நடத்த முடியாது என்றும் ரஷ்யா என்ற எதிரி எளிதில் வீழ்ந்துவிடுவார் என்றும் உக்ரைன் ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.அண்மையில் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு விலை உச்சவரம்பு நிர்ணயித்ததை அமெரிக்கா வரவேற்றதுடன், சர்வதேச அளவில் நிலவும் கச்சா எண்ணெய் பற்றாக்குறையை சமாளிக்க இந்த ரஷ்ய கச்சா எண்ணெய் விலை உச்சவரம்பு சரி செய்யும் என்றும் அமெரிக்கா கருத்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.