ஏகப்பட்ட மிரட்டல்கள் …
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் சமீபத்திய நேர்காணல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியராக உள்ள ரகுராம் ராஜன், தனியார் பத்திரிகையின் நேர்காணலில் பங்கேற்றார். அதில் பல்வேறு கேள்விகளை ரகுராம் ராஜன் எதிர்கொண்டார். அதில் குறிப்பாக அவர் பதவியில் இருந்த காலத்தில் எழுந்த சர்ச்சைகள் குறித்து கேள்வி கேட்டபோது பல தகவல்களை அவர் அடுக்கினார். அதிலும் குறிப்பாக அவர் பதவியில் இருந்தபோது, ஏராளமானோர் தமக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறியுள்ளார். தனக்கு கெட்ட பெயர் உருவாக்க வேண்டும் என்று ஒரு குழுவே செயல்பட்டதாகவும் கூறினார். விலைவாசியை கட்டுப்படுத்த தாம் எடுத்த நடவடிக்கைகளுக்காக பெரிய தொழிலதிபர்களிடம் இருந்து அழுத்தம் வந்ததாக கூறினார். சிலர் தம்மை மிரட்டியதாகவும் கூறியுள்ளார். தம்மை வேலையை விட்டு நீக்கப்போவதாகவும் மிரட்டியதாக ராஜன் தெரிவித்தார். மிரட்டல்கள் ஒரு பக்கம் வந்தபோதிலும் தனது பணியை சிறப்பாக செய்ததாகவும் ராஜன் குறிப்பிட்டுள்ளார். வங்கித்துறையில் வாராக்கடன்களை துடைத்து எடுக்க முற்பட்டதாகவும், கடன்களை கட்டும்படி கடன் வாங்கியவர்களை தொடர்ந்து கேட்டு வந்ததாகவும் கூறினார். தொடர்ந்து தனது பணியால் சிலர் மகிழ்ச்சியாக இல்லை என்றார். இந்திய பொருளாதாரத்துக்கு தனது பங்களிப்பை நினைத்து பெருமைபடுவதாக ரகுராம் ராஜன் கூறியுள்ளார். தற்போது யுபிஐ பணப்பரிவர்த்தனை பெரிய அளவில் பேசப்பட்டு வந்தாலும் தன்னுடையை பங்கும் அதில் முக்கியமானது என்று ரகுராம் ராஜன் கூறியுள்ளார். தாங்கள் எடுத்த வங்கி சீர்திருத்த நடவடிக்கைகள் பல ஆண்டுகள் பேசும் என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.