உயர்ந்து முடிந்த சந்தைகள்..

இந்திய பங்குச்சந்தைகள், மே 17ஆம் தேதி நல்ல ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 253 புள்ளிகள் உயர்ந்து 73,917 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 62 புள்ளிகள் உயர்ந்து 22,466 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது., தேசிய பங்குச்சந்தையில் நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்கள் துறையினில் 2.8 விழுக்காடு உயர்வு காணப்பட்டது. ரியல் எஸ்டேட், உலோகம், ஆட்டோமொபைல் துறையில் 1.7 விழுக்காடு உயர்வு காணப்பட்டது. தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் 0.9விழுக்காடு சரிவை கண்டன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சந்தை நிலவரத்தின் பிரதிபலிப்பாகவே இந்திய சந்தைகள் உள்ளன. பல நிறுவனங்களின் 4 ஆவது காலாண்டு முடிவுகள் நம்பிக்கை அளித்ததால் இந்திய சந்தைகளில் உறுதித்தன்மை காணப்பட்டது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை ஒரு சவரன் 200 ரூபாய் விலை குறைந்து 54ஆயிரத்து160 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 6770ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை, கிராமுக்கு மாற்றமின்றி 92 ரூபாய் 50 காசுகளாக விற்கப்படுகிறது.. கட்டி வெள்ளி விலை 92 ஆயிரத்து500 ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் .