வரிசைகட்டும் மாருதி கார்கள்..!!
கார் நிறுவனங்களில் மிகவும் பெயர் பெற்ற நிறுவனமாக திகழ்கிறது மாருதி சுசுக்கி நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைவர் ஆர்சி பார்கவா என்பவர் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஆகஸ்ட் 7 முதல் மாருதி 3.0 என்ற திட்டம் செயல்படும் என்று தெரிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் அடுத்த 9 ஆண்டுகளில் 20 லட்சம் கார்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2031ஆம் ஆண்டுக்குள் 28 வகை வித்தியாசமான மாடல் கார்களை மாருதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். அந்த நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையில் இதை பார்கவா தெரிவித்துள்ளார்.இந்தியாவில் எஸ்யுவி ரக கார்களுக்கு நள்ள வரவேற்பு உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள பார்கவா, ஆட்டோமொபைல் துறை பெரிய வளர்ச்சி பெறாது என்றாலும் 2030-31 காலகட்டம் வரை ஆண்டுக்கு 6% வளர்ச்சியை நிச்சயம் தரும் என்றும் கூறியுள்ளார்.
முதல் இரண்டு நிலைகளை எட்ட மாருதிக்கு 40 ஆண்டுகள் ஆனதாக கூறியுள்ள அவர் கொரோனா காலகட்டத்துடன் 2ஆவது நிலை முடிந்துவிட்டது என்றார். உள்நாடு மற்றும் வெளிநாட்டு தேவைகளை கருத்தில் கொண்டு 20 லட்சம் புதிய கார்களை தயாரிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் பார்கவா கூறியுள்ளார். கடந்தாண்டு 2,59,000 கார்களை ஏற்றுமதி செய்திருக்கும் நிலையில் 2030-31 காலகட்டத்தில் ஏழரை முதல் 8 லட்சம் கார்கள் வரை ஏற்றுமதி செய்ய நேரிடும் என்றும் தெரிவித்தார்.
இதுவரை சந்தையில் 18 வகையில் மாருதி நிறுவன கார்கள் உள்ளன. 2030-31 காலகட்டத்தில் மாருதி சுசுக்கி நிறுவனத்தில் புதிதாக 6 மின்சார கார்கள் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். கரியமில வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கான முயற்சியாக பெட்ரோலுக்கு பதிலாக சிஎன்ஜி,எத்தனால்,பயோகேஸ் மற்றும் ஹைப்ரிட் வகை நுட்பங்கள் கார்களில் கொண்டுவரும்போது அது நிறுவன இலக்குகளை எட்ட உதவும் என்றும் பார்கவா நம்பிக்கை தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் கார்களுக்கான உதிரிபாக உற்பத்தியில் மேலும் முன்னேற்றம் காணப்படும் என்றும்,ஆனால் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.