வெளியாகிறது “மெட்பிளஸ் ஹெல்த் சர்வீசஸ்” – IPO !
இந்தியாவின் முன்னணி மருந்தக நிறுவனமான மெட்பிளஸ் ஹெல்த் சர்வீசஸ் தனது ஐபிஓவை 13ந் தேதி வெளியிடுகிறது. பங்கின் ஆரம்ப விலையாக 780 லிருந்து 796 ரூபாய் வரை நிர்ணயித்துள்ளது. மெட்பிளஸ் மொத்தம் 1398.29 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. அதற்காக 600 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும் , ஆஃபர் ஃபார் சேல்ஸ் முறையில் 798.29 கோடி ரூபாயையும் திரட்ட முடிவு செய்துள்ளது.
பிஐ ஆப்பர்சூனிட்டி ஃபண்ட் 1 தன்வசமுள்ள 623 கோடி ரூபாயையும், எஸ்எஸ் ஃபார்மா எல்எல்சி 107 கோடி மதிப்புள்ள பங்குகளையும் ஆஃபர் ஃபார் சேல்ஸ் முறையில் சந்தையில் இறக்க தீர்மானித்துள்ளன. புதிய வெளியீட்டுத் தொகையானது மெட்பிளஸின் துணை நிறுவனமான ஆப்டிவாவின் செயல்பாட்டு மூலதனத் தேவைகளுக்காக நிறுவனத்தால் பயன்படுத்தப்படும், இந்த சலுகையில் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ரூ. 5 கோடி மதிப்புள்ள பங்குகளை முன்பதிவு செய்வதும் அடங்கும்.
தகுதியான பணியாளர்கள் இறுதி சலுகை விலைக்கு (தலா.78) தள்ளுபடியில் பங்குகளைப் பெறுவார்கள்.:முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 18 ஈக்விட்டி பங்குகளுக்கும் அதன்பின் 18 ஈக்விட்டி பங்குகளின் மடங்குகளுக்கும் ஏலம் எடுக்கலாம். சில்லறை முதலீட்டாளர்கள் ஒரு லாட்டிற்கு குறைந்தபட்சம் ரூ.14,328 முதலீடு செய்யலாம் மற்றும் அதிகபட்ச முதலீடு 13 லாட்களுக்கு ரூ.1,86,264 ஆகும்.
2021 நிதியாண்டில் மெட்பிளஸ் ரூ. 63.11 கோடி லாபம் ஈட்டியுள்ளது, இது நிதியாண்டில் ரூ.1.79 கோடியாக இருந்தது. இதே காலத்தில் வருவாய் ரூ.2,870.6 கோடியிலிருந்து ரூ.3,069.26 கோடியாக அதிகரித்துள்ளது. செப்டம்பர் 2021 உடன் முடிவடைந்த ஆறு மாத காலப்பகுதியில் லாபம் ரூ. 66.36 கோடியாக இருந்தது, ரூ. 22.27 கோடியிலிருந்து அதிகரித்து, வருவாய் ரூ. 1,462.55 கோடியிலிருந்து ரூ. 1,879.92 கோடியாக உயர்ந்துள்ளது.
ஆக்ஸிஸ் கேப்பிட்டல், கிரெடிட் சூஸி செக்யூரிட்டிஸ் (இந்தியா), எடல்வைஸ் ஃபைனான்ஸியல் சர்வீஸ், நோமுரா ஃபைனான்ஸியல் அட்வைசரி அண்ட் செக்யூரிட்டிஸ் (இந்தியா) ஆகிய நிறுவனங்கள் மெட்பிளசின் பங்கு விற்பனையை மேற்கொள்கின்றன. தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்காளம், மகாராட்டிரா ஆகிய இடங்களில் உள்ள 2,000 கடைகள் மூலம் மெட்பிளஸ், மருந்து மற்றும் ஆரோக்கிய தயாரிப்புகளை வழங்குகிறது.