23%வீழ்ந்த எம்ஜி வாகன விற்பனை..
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது எம்ஜிமோட்டார்ஸ் இந்தியா நிறுவனம். இந்த நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் 23 விழுக்காடு வியாபாரத்தில் சரிவை கண்டிருக்கிறது. மார்ச் மாதத்தில் அந்த நிறுவனத்தால் வெறும் 6051 வாகனங்களை மட்டுமே விற்க முடிந்துள்ளது. கடந்த 2023-24 நிதியாண்டில் இந்நிறுவனம் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி 14 விழுக்காடாக இருந்ததாக கூறியிருந்தது. 2022-23 காலகட்டத்தில் எவ்வளவு வாகனங்கள் விற்கப்பட்டன, அவை அதற்கு அடுத்த ஆண்டில் எவ்வளவு வாகனங்களாக மாறின என்ற எந்த தரவுகளையும் அந்நிறுவனம் வெளியிடவில்லை. ஆட்டோமொபைல் துறையில் குறிப்பாக பயணிகள் வாகன விற்பனையில் மார்ச் மாதத்தில் அந்நிறுவனம் சரிவை கண்டுள்ளது. இந்தியாவில் பண்டிகைகள் பெரிய அளவில் மார்ச் மாதத்தில் இல்லாததும், விற்பனை சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. இது மட்டுமின்றி பிற காரணிகளும் கூறப்படுகின்றன. இனி வரும் மாதங்களில் கணிசமான விற்பனை இருக்கும் என்றும் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.