வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை..
வேலை தேடி லாவோஸ், கம்போடியா செல்லும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பிட்ட அந்த நாடுகளில் போலியான வேலைவாய்ப்பு இருப்பதாக விளம்பரங்கள் அதிகரித்துள்ளதாகவும், கவனவமாக இருக்கவும் அந்த சுற்றிக்கை தெரிவிக்கிறது.லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்கு செல்ல விரும்பும் இந்தியர்களை குறி வைத்து ஒரு கும்பல் போலியான வேலைவாய்ப்புகள் இருப்பதாக கூறி வேலைக்கு ஆட்களை சேர்ப்பதாகவும், பின்னர் அவர்களை சைபர் குற்றவாளிகளாக்குவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது. தேவையற்ற சிக்கல்களை தவிர்க்க பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலமாக மட்டுமே வேலைக்கு செல்லவும் நாம்பெனில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அண்மையில் லாவோஸில் இருந்து வேலை இருப்பதாக கூறி பணியமர்த்தப்படும் பணியாளர்கள் கிரிப்டோ கரன்சி தொடர்பான மோசடிகளில் சிக்குவதாகவும், போலி கால்சென்டர்களில் பணி அமர்த்தப்படுவதாகவும் தெரியவந்தது. துபாய், பாங்காக், சிங்கப்பூரில் இருக்கும் முகவர்கள் பல்வேறு தரப்பினருக்கு போலியான வேலைவாய்ப்பு ஆஃபர்களை அனுப்பி அவர்களை தாய்லாந்துக்கு அழைத்துச்சென்று, அங்கிருந்து லாவோசுக்கு அழைத்துச்சென்று மோசடி வேலைகளில் ஈடுபடுத்துவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லாவோஸ் மற்றும் தாய்லாந்துக்கு சென்றதும் பணி விசாவை அந்நாட்டு அதிகாரிகள் தருவதில்லை என்றும் மனித கடத்தலில் சிக்கினால் அந்நாட்டு சட்டப்படி 18 ஆண்டுகள் வரை சிறையில் இருக்க வேண்டும் என்றும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. லாவோஸ் நாட்டில் இது போன்ற போலி நிறுவன வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களுக்கு +856-2055536568 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.