விண்வெளியிலும் அம்பானிக்கு போட்டியாக மிட்டல்…
இந்தியாவில் ரிலையன்ஸ் மற்றும் ஏர்டெல் நிறுவனத்திற்கு ஆரோக்கியமான தொழில் போட்டி பலஆண்டுகளாக இருந்துவருகிறது. இந்த நிலையில் ஜியோவை விட ஒரு படி மேலே சென்றுள்ள ஏர்டெல் நிறுவனம் ஒன் வெப் இந்தியா என்ற நிறுவனத்தின் ஒப்புதலுடன் Eutelsat OneWeb என்ற வணிக செயற்கைக் கோளை இயக்க திட்டமிட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் அடிப்படையில் இணைய சேவையை ஏர்டெல் அளிக்க இருக்கிறது. பிரான்சைச் சேர்ந்த Eutelsat நிறுவனம் ஒன் வெப் நிறுவனத்துடன் இணைந்து இந்தாண்டு ஒப்பந்தம் செய்திருக்கிறது. இன் ஸ்பேஸ் என்ற அமைப்பின் ஒப்புதலை பெற்றிருக்கும் முதல் நிறுவனமாக ஒன் வெப் கூட்டு நிறுவனம் திகழ்கிறது. அமெரிக்காவில் உள்ள எலான் மஸ்கின் செயற்கைக்கோள் திட்டம் போல இந்தியாவிலும் இந்த திட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. ஒன் வெப் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை சுனில் மிட்டல் வைத்திருக்கிறார். ஒன் வெப் நிறுவனத்துக்கு என GEO,LEOசெயற்கைக்கோள்கள் உள்ளன. ஆனால் ஜியோ நிறுவனம் லக்சம்பர்க்கைச் சேர்ந்த SES செயற்கைக் கோள்களைத் தான் நம்பியிருக்கின்றன.
இந்தியாவில் செயற்கைக்கோள் சார்ந்த பொருளாதாரம் என்பது 2025ஆம் ஆண்டுக்குள் 13 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்புத்துறையிடம் இருந்து அலைக்கற்றை உரிமத்தை ஒன்வெப் பெற்றுவிட்டால் ஜியோவைவிட பார்தி ஏர்டெல் நிறுவனம் முன்னணியில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்தாண்டு கொடுத்த பேட்டியில் ஒன் வெப் நிறுவனத்துக்கு போட்டியாளராக ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் எலான் மஸ்க் மட்டுமே இருப்பதாகமிட்டல் கூறியிருந்தார். ஆனால் போட்டியாளரான ஜியோவை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று கடந்தாண்டே வார்த்தே போர் நடைபெற்ற நிலையில் தற்போது ஏர்டெல் பணிகளை துரிதப்படுத்துகிறது.
ஏர்டெலோ, ஜியோவோ யார் பணிகளை துரிதப்படுத்தினாலும், செயற்கைக்கோள் சார்ந்த அலைக்கற்றைக்கு டிராய் ஒப்புதல் என்பது மிகவும் அவசியம். ஏலம் விட்டு அதன் மூலம் விண்வெளி செயற்கைக்கோள் சார்ந்த இணைய சேவைக்கு அரசு அனுமதி அளிக்கட்டும் என்று ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ நிறுவன அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.