முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களை எட்டியது!
ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது 100 பில்லியன் டாலர்களை எட்டியது. இதன் மூலம் அவர் ஜெஃப் பெசோஸ் மற்றும் எலோன் மஸ்க் ஆகியோருடன் உலகின் 100 பில்லியன் டாலர் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்தார்.
இந்த 100 பில்லியன் டாலர் கிளப்பில் பதினோராவது நபராக இணைந்துள்ளார் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. இதற்கு, அவரது நிறுவனத்தின் பங்கு மதிப்பு வெள்ளிக்கிழமையன்று சாதனை உச்சத்தை எட்டியது மிக முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுகிறது. ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியலின் படி, இந்த ஆண்டு மட்டும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 23.8 பில்லியன் டாலர்கள் அதிகரித்து தற்போது அவரது மொத்த சொத்து மதிப்பு 100.6 பில்லியன் டாலராக இருக்கின்றது.
2005 ஆம் ஆண்டில் தனது மறைந்த தந்தையிடமிருந்து எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் வணிகங்களைப் பெற்றதிலிருந்து, 64 வயதான அம்பானி இந்நிறுவனத்தைச் சில்லறை, தொழில்நுட்பம் மற்றும் இ-காமர்ஸ் போன்ற மற்ற துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக மாற்ற முயன்றார். 2016 ல் தொடங்கிய அவரது தொலைத்தொடர்பு பிரிவும், இப்போது இந்தியச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக உள்ளது.
பேஸ்புக் மற்றும் கூகுள் முதல் கே.கே.ஆர் & கோ மற்றும் சில்வர் லேக் வரை, முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை விற்றதன் மூலம் அவரது சில்லறை மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த ஆண்டு சுமார் 27 பில்லியன் டாலர்களைச் சம்பாதித்தன. பல சர்வதேச நிறுவனங்களுடனான கூட்டணி என்பது இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இன்னும் சாதகமாக அமைந்துள்ளது. குறிப்பாகச் சவுதி அராம்கோவுடனான ரிலையன்ஸின் கூட்டணி என்பது மாபெரும் கூட்டணியாகப் பார்க்கப்படுகிறது. இது எண்ணெய் வணிகத்தில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வரும் அம்பானிக்கு இன்னும் சாதகமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவலுக்குப் பின்னர், முகேஷ் அம்பானியின் சில்லறை வணிகம் மற்றும் எண்ணெய் வணிகமானது மீட்சி காணத் தொடங்கியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு கூட தனது ஆடை வணிகத்தினை மேம்படுத்தும் விதமாக, தமிழ்நாட்டை சேர்ந்த நல்லி மற்றும் போத்தீஸ் நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது. இப்படித் தொடர்ந்து போட்டி நிறுவனங்களுக்கு டஃப் கொடுத்து வரும் முகேஷ் அம்பானியின், சொத்து மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.