பாகப்பிரிவினைக்குத் தயாராகும் முகேஷ் அம்பானி !
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, தனது வர்த்தக சாம்ராஜ்யத்தை குடும்பத்துக்கு பிரித்துக் கொடுப்பது பற்றி தீவிர ஆலோசனையில் இருக்கிறார். தனது சொத்துக்களை பிரிப்பதற்கும், நிறுவனத்தின் நிர்வாக முடிவுகளை எடுப்பதற்கும் கடந்த வருடம் முகேஷ் அம்பானி, தனது குடும்பத்தினரை நியமித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த செய்தியை உடனடியாக மறுத்தார் அம்பானி.
இந்த நிலையில் சொத்து பிரிப்பது தொடர்பாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உலக அளவில் ‘வால்டன் முதல் கோச்’ வரையிலான பணக்கார குடும்பங்கள், எப்படி தங்களது சொத்துக்களை பிரச்சினை இல்லாமல் தங்கள் பிள்ளைகளுக்கு பிரித்து கொடுக்கின்றன என்பதை முகேஷ் ஆய்வு செய்தார். 208 பில்லியன் டாலர் வர்த்தகத்தை கொண்ட வால்மார்ட் நிறுவனம், வால்டன் குடும்பத்தினரின் சொத்தாகும். அந்நிறுவனத்தின் மிகப்பெரிய சொத்து பிரிப்பு அண்மையில் மிகவும் சுமுகமாக முடிந்தது.
எனவே வால்டனை முன்மாதிரியாகக் கொண்டு , தனது ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்- சில் தனது ஆதிக்கம் மட்டுமல்லாமல் தனது குடும்பத்தின் ஆதிக்கத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளார் அம்பானி. தற்போதுள்ள தகவல்படி தனது மற்றும் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களை ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்தி, அதன் மூலம் தனது நிறுவனங்களை நிர்வாகம் செய்யலாம் என்று முடிவு எடுத்து உள்ளார். இந்த அறக்கட்டளையில் அம்பானி தவிர அவரது மனைவி நீதா அம்பானி, பிள்ளைகள் ஆகாஷ், ஈஷா மற்றும் ஆனந்த் அம்பானி ஆகியோர் இருப்பார்கள். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-சை முகேஷ் அம்பானியுடன் இணைந்து அடுத்த தலைமுறையும் நிர்வாகம் செய்ய இருக்கின்றனர். இதனால் யாருக்கும் குழப்பமும் வராது. பிரச்சினையும் இருக்காது.
ஆசியாவின் பணக்காரக் குடும்பங்கள் எப்படி தங்கள் சொத்துக்களை பிரிப்பதில் அதிக அளவிலான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் அதேபோல ஆசியாவில் மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான பெரும் பணக்கார குடும்பங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.