டிவிட்டரை படுத்தி எடுக்கும் மஸ்க்…
டிவிட்டர் நிறுவனத்தை கடந்தாண்டு எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து அந்த நிறுவனத்தையும் செயலியையும் படாதபாடு படுத்தி வருகிறார் என்றே சொல்ல வேண்டும். விளையாட்டாக ஆரம்பித்த டிவிட்டரை வாங்கும் முயற்சி ஒரு கட்டத்தில் நிஜமானது. 44 பில்லியனுக்கும் அதிகமான தொகை கொடுத்து அவர் டிவிட்டரை வாங்கியதில் இருந்து பல்வேறு புதிய மாற்றங்களை செய்தார். முதலில் 4-ல் 3 பங்கு பணியாளர்களை பணிநீக்கம் செய்த மஸ்க். சந்தா செலுத்தும் வசதியை கொண்டுவந்தார். இதனால் டிவிட்டர் நிறுவனம் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் அண்மையில் பேஸ்புக் நிறுவனம், டிவிட்டருக்கு போட்டியாக திரெட்ஸ் என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த மஸ்க் என்ன செய்கிறோம் என்று புரியாமல் பல முயற்சிகளை செய்து வருகிறார். இதன் அடுத்தகட்டமாக, டிவிட்டர் செயலியில் வெரிபைடு நீள நிற பட்டனுக்கு பக்கத்தில் உள்ள குருவி சின்னத்துக்கு பதிலாக வேறு இலச்சினையை மாற்ற விரும்பினார்.டிவிட்டர் பயனர் ஒருவர் எக்ஸ் என்று வையுங்கள் என்று சொன்னார். உடனே, நல்லா இருக்கே என்று அதனை செயல்படுத்தத் தொடங்கிவிட்டார். எக்ஸ்.காம் என்ற இணையதளத்தை டைப் செய்தால் அது நேரடியாக டிவிட்டர் பக்கத்துக்கு செல்லும் வகையில் மாற்றம் செய்துள்ளார். டிவிட்டர் நிறுவனத்தின் பெயரையும் மாற்ற மஸ்க் முயற்சி செய்து வருகிறார்.இதன் ஒரு பகுதியாக டிவிட்டர் நிறுவன பெயர் டியூஸ் எக்ஸ் அல்லது டிவிட்டர் எக்ஸ் என்று மாற அதிக வாய்ப்பிருப்பதாக அமெரிக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிவிட்டரை வைத்துக்கொண்டு எதையாவது செய்துவிட வேண்டும் என்று முடிவுடன் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் தீவிரம் காட்டி வருகிறார்.கடந்த 1999ஆம் ஆண்டு எக்ஸ் டாட்காம் என்ற பக்கத்தை மஸ்க் வாங்கியிருந்தார். தற்போது அந்த எழுத்தே அவரின் வணிகத்தை வளர்க்கும் முயற்சியாக மாறிவிட்டது.