உலகம் சுற்றும் மஸ்க்..
இந்தியாவுக்கு வர நேரமில்ல.. டெஸ்லா கம்பெனில ஒரே வேலை என்று கம்பி கட்டிய மஸ்க், அண்மையில் இந்தோனேசியாவுக்கு சென்றார். இந்தோனேசியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். இதையடுத்து எலான் மஸ்க் இலங்கைக்கு செல்லவும் திட்டமிட்டு உள்ளார். இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவை தொடங்குவது குறித்து அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் மஸ்க் திட்டமிட்டு உள்ளார். கடந்த ஏப்ரல் 20 முதல் 22 வரை இந்தியா வர திட்டமிட்டு இருந்த மஸ்க், கடைசி நேரத்தில் பிரதமர் மோடியுடனான சந்திப்பை ரத்து செய்தார். டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கால் பதிக்க திட்டமிட்டு இருந்த நிலையில், அண்மையில் அரசாங்கம் வெளிப்படையாக ஒரு கருத்தை வெளியிட்டது. அதில் எந்த ஒரு தனிப்பட்ட நிறுவனத்துக்காகவும், இந்தியாவின் மின்சார வாகன கொள்கை மாற்றப்படாது என்றது. இந்தியாவுக்கு வர நேரமில்லை என்று குறிப்பிட்ட மஸ்க், சீனாவுக்கு சென்று அங்கு உள்ள முக்கிய நிர்வாகிகளை சந்தித்து மின்சார வாகன உற்பத்தியில் உள்ள சிக்கல்களை களையும்படி கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து எலான் மஸ்க் விரைவில் தகவல் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது