பொதுநலன்காக கண்டிப்பா விசாரிக்கணும் சார்!!
ஹிண்டன்பர்க் என்ற அமெரிக்க நிறுவனம், ஆராய்ச்சிகளுக்கு பெயர் பெற்றதாகும். இந்த நிறுவனம் அதானி குழுமத்தின் பங்கு மதிப்பீடு, வரி ஏய்ப்பு நடந்துள்ளதா உள்ளிட்டவை குறித்து ஆராய்ந்து அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதனால் அதானி குழும பங்குகளின் விலை கடுமையாக சரிந்தன. ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கையின்படி, அதானி குழுமம் பெரிய அளவில் பங்குச்சந்தைகளில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் காங்கிரஸின் பொதுச்செயலாளர்களில் ஒருவரும், எம்.பியுமான ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விமர்சித்துள்ளார்.
வழக்கமாக ஒரு நிறுவன ஆய்வறிக்கைக்கு காங்கிரஸ் எப்போதும் இப்படியெல்லாம் அறிக்கை விடாது என்று கூறியுள்ள ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் மோடி, முதலமைச்சராக இருந்த காலம் முதலே அதானி குழுமத்துக்கு சலுகைகளை அளித்திருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளார். மக்களின் வரிப்பணம் மற்றும் முதலீடுகள் கொண்டுள்ள எல்ஐசி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி பங்குகள், அதானி குழுமத்தில் முதலீடுகள் செய்துள்ளது குறித்து ரிசர்வ் வங்கியும், பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருப்புப் பணத்திற்கு எதிராக கடுமையான முயற்சிகளை செய்வதாக கூறும் மத்திய அரசு, பெரிய தொழிலதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக சாடியுள்ள ஜெய்ராம் ரமேஷ், பெயரளவுக்கு செபி விசாரிக்காமல் உண்மையில் வரி ஏய்ப்பு, போலி கணக்கீடு நடந்ததா என்று விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மக்களின் பணத்தை எடுத்து தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்ய பல நிறுவனங்கள் தயங்கிய நிலையில் அதானி குழுமத்துக்கு பொதுத்துறை நிறுவனங்கள் எத்தனை பெரிய தொகையை எப்படி அதானி குழுமத்தில் முதலீடு செய்தனர் என்றும், இது இந்திய நிதி கட்டமைப்பையே கேள்வி எழுப்பியுள்ளதாகவும் ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளார்.
எல்ஐசியின் பணம் 74 ஆயிரம் கோடி ரூபாயை எப்படி அதானி குழுமம் வைத்துக் கொண்டுள்ளது என்றும் ஜெய்ராம் ரமேஷ் கேட்டுள்ளார். ரிசர்வ் வங்கி இது பற்றி எப்போது விசாரணை நடத்தும் என்றும் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கையில் கேட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் ஒற்றை ஆதிக்கத்தை அதானி குழுமம், துறைமுகம், விமான நிலையங்களில் செலுத்தி வருவதாக கூறியுள்ள காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தினை தனியார் மயமக்க நினைத்த போது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆவணங்களை சரி பார்க்கும் முயற்சி, அதற்கு பிறகு என்ன ஆனது என்றே தெரியாமல் போய்விட்டதாகவும் பரபரப்பு புகார்களை தெரிவித்துள்ளார். வெளிப்படை தன்மையில்லாத கார்பரேட் நிறுவனமான அதானி குழுமம் போன்றவற்றின் வரி ஏய்ப்பு, பங்குச்சந்தையில் தவறான கணக்கிடுதல் போன்ற நடவடிக்கைகள் குறித்து ரிசர்வ் வங்கியும், செபியும் நிச்சயமாக விசிரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.