டாடாவின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் என் சந்திரசேகரனின் இரண்டாவது பதவிக்கால அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது!
டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் பங்குதாரர்கள் செப்டம்பர் 14 அன்று தற்போது தலைவராக இருக்கும் என் சந்திரசேகரனுக்கு இரண்டாவது முறையாகத் தலைவர் பதவிக்கு வாக்களிக்கலாம் என்று தெரியவந்துள்ளது. டாடா குழுமத்தில் பணியாற்றுவோரின் கூற்றுப்படி, சந்திரசேகரனின் காலத்தில், வயர்லெஸ் டெலிபோனிலிருந்து வெளியேறுவது போன்ற பாரம்பரிய பிரச்சினைகளை இந்தக் குழு மிகத் திறமையாகக் கையாண்டு இருக்கிறது என்று பெருமிதம் கொண்டிருக்கிறது.
பூஷன் ஸ்டீல், பிக் பாஸ்கெட், 1mg போன்ற நிறுவனங்கள் இவரது தலைமையின் கீழ் வாங்கப்பட்டவை. சமீபத்தில் டாடா சன்ஸின் துணை நிறுவனமான “பானடான் ஃபின்வெஸ்ட்” தொலைத்தொடர்பு உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான தேஜஸ் நெட்வொர்க்கில் 43.3 சதவீத பங்குகளை வாங்கியது, மேலும் 26 சதவிகிதத்தை வாங்க முற்படுவதாகவும் அறிவித்துள்ளது.
டாடா குழுமம் தனது ‘சூப்பர் ஆப்’ ஐ அறிமுகப்படுத்த உள்ளது, இதன் மூலம் டாடா குழுமத்தின் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வரும். டாடா குழுமம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டதோடு மட்டுமில்லாமல் பல மரபு சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்க முடிந்தது என்பதைக் கருத்தில் கொண்டு, சந்திரா அவர்களின் தலைமையின் தொடர்ச்சி தேவை என்பதை நிறுவனத்தை சார்ந்தோர் கூறுகின்றனர்.
உயர்தர வாகனங்கள் மற்றும் மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படும் சிப்-களுக்கு நிலவும் உலகளாவிய பற்றாக்குறையைத் தொடர்ந்து இவ்வகை சிப்-களை தயாரித்து வழங்கும் வணிகத்தில் நுழைவதற்கான திட்டத்தையும் அறிவித்தது. டாடா குழுமம் ஏர் இந்தியாவை ஏற்று நடத்த முன்னெடுப்புகளை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டிசிஎஸ் பல ஆண்டுகளாக டாடா குழுமத்திற்கு லாபத்தை ஈட்டி தந்துகொண்டிருக்கிறது. டாடா குழுமத்திலிருந்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் டிசிஎஸ்-ன் வருவாயைத் தவிர்த்து, நடப்பு நிதியாண்டு வரை தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக ஒருங்கிணைந்த அடிப்படையில் நிகர இழப்பைச் சந்தித்து வருகிறது. டிசிஎஸ்- லிருந்து வரும் ஈவுத்தொகையை கொண்டே டாடா மற்ற நிறுவனங்களை கையகப்படுத்த பெரிதும் உதவுகிறது.