புதிய மின்சார வாகன கொள்கை..
மின்சார கார் மற்றும் வாகனங்கள் உற்பத்தி செய்யும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு புதிய மின்சார வாகன கொள்கையை வகுக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அதன்படி புதிய மின்சார வாகனங்களை இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்குள் அதிக முதலீட்டாளர்களை ஈர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் தென்கொரியாவில் இருந்து அதிக முதலீட்டாளர்களை கவர்ந்து வர அரசு முடிவெடுத்து இருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. மின்சார வாகனங்களை அதிகளவில் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உற்பத்தி மையத்தை தொடங்க வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய கொள்கைகளால் இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தாலி , தென்கொரியாவில் இருந்தும் ஏராளமான முதலீட்டாளர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம். இதுபற்றி தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் கூடிப்பேசி இறுதி முடிவுகளை எடுக்க இருக்கிறதாம். மின்சார கார்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு மானியம் அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறதாம்.அண்மையில் டெஸ்லா நிறுவன ஆலைக்கு சென்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ., இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்துக்கான உபகரணங்கள் உற்பத்தி இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தார். இதன் மூலமாக இந்தியாவுக்கு ஓராண்டில் 1.9பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கார்களை விற்க வேண்டுமானால் 40 விழுக்காடு இறக்குமதி வரி மட்டுமே செலுத்த வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரி வருகிறது. ஆனால் தற்போது 40 ஆயிரம் டாலர்களுக்கு மேல் உள்ள அனைத்து கார்களுக்கும் 60%அல்லது அதற்கும் அதிகபட்சமாக 100%வரியாக விதிக்கப்படுகிறது. சீனா,ஜெர்மனி, அமெரிக்கா, கனடா,மெக்சிகோ மற்றும் நெதர்லாந்தில் டெஸ்லா நிறுவனத்தின் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.