புதிய அணிகள் களமிறங்கும் 2022 ஐ.பி.எல் போட்டித்தொடர் !
அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் இரண்டு புதிய அணிகள் களமிறங்க உள்ளன, இந்த அணிகளுக்காக நடைபெற்ற ஏலத்தின் மூலம் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்ததாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. உலகின் பணக்கார விளையாட்டு என்று கருதப்படும் ஐபிஎல் போட்டிகள், பிசிசிஐ சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.
இந்த வருடம் 2 புதிய அணிகள் தேர்வு செய்யப்படும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது, அதன்படி அகமதாபாத், லக்னோ, குவஹாட்டி, கட்டாக், ராஞ்சி, தர்மசாலா நகர அணிகள் இதற்காக விண்ணப்பித்திருந்தன. அதில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் இப்போது தேர்வு செய்யப்பட்டுள்ளன. புதிய அணிக்கான ஏலத்தொகை 2,000 கோடி ரூபாய் என்று பிசிசிஐ நிர்ணயித்து இருந்தது.
இதற்கான ஏலம் துபாயில் நடைபெற்றது, இதில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலர் ஜெய் ஷா, கட்டுப்பாட்டுக் குழு தலைவர் பிரிஜேஷ் படேல் உட்பட பலர் பங்கேற்றனர், ஏலத்தில் கொல்கத்தாவை சேர்ந்த தொழில் அதிபர் சஞ்சீவ் கோயங்காவின் ஆர்பிஎஸ்ஜி குழுமம் சார்பில் 7,090 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி ஏலம் எடுக்கப்பட்டது, சிபிஎஸ்சி கேப்பிட்டல் குழுமம் சார்பாக 5,600 கோடி ரூபாய்க்கு அகமதாபாத் அணி ஏலம் எடுக்கப்பட்டது, இதன் மூலமாக 12 ஆயிரத்து 690 கோடி ரூபாய் பிசிசிஐக்கு கிடைத்தது.
இந்த ஏலத்தில் அதானி குழுமம், மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் டோரண்ட் குழுமம் சார்பிலும் ஏலம் கேட்கப்பட்டது, ஆனால் விலை குறைவாக இருந்ததால் அந்த அணிகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன, டி20 உலகக் கோப்பை போட்டிகள் முடிந்த பின்னர் வீரர்களின் தேர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.