லிஸ்டில் இணைந்த நியூசிலாந்து..
நியூசிலாந்தின் பொருளாதார நிலைமை முதல் காலாண்டில் மிக மோசமடைந்து உள்ளதால் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு உள்நாட்டு உற்பத்தி தொடர்பான புள்ளிவிவரம் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் நியூசிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் பூஜ்ஜியம் புள்ளி 1 விழுக்காடு குறைந்ததாக கூறப்படுகிறது. அடுத்து வரும் காலாண்டுகளில் இது 0.3%, 0.7% என்ற அளவில் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மந்த நிலை வந்ததால் அந்த நாட்டில் கடன்களுக்கான வட்டிவிகிதம் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பும் குறைந்துள்ளது. நியூசிலாந்தின் நிதிநிலைமையை அசைத்து பார்க்க திடீர் வெள்ளமும்,கடும் சூறாவளிகளும் காரணமாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடந்த இந்த பேரிடர்களால் அந்நாடு சிக்கலை சந்தித்து வருகிறது. அந்த நாட்டில் வரும் அக்டோபர் மாதம் தேர்தல் வர இருக்கிறது. அதிகரித்து வரும் பொருட்களின் விலை, வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது. அந்நாட்டில் பணவீக்கம் 1 முதல் 3விழுக்காடாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டு மத்திய வங்கி கூறியுள்ள நிலையில் அங்கு தற்போது பணவீக்கம் அளவு 6.7%ஆக உள்ளது. 1999ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் இதுபோன்ற சிக்கலை நியூசிலாந்து சந்தித்து வருவதால் கடன்கள் மீதான வட்டியை அந்நாட்டு அரசும் மத்திய வங்கியும் உயர்த்தாமல் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.