அடுத்து குண்டு !!!

அமெரிக்காவைச் சேர்ந்த நேட் ஆண்டர்சன் என்பவரால் நடத்தபடுவது ஹிண்டன்பர்க் என்ற நிறுவனம். கிட்டத்தட்ட டிடக்டிவ் போல செயல்படும் இந்த நிறுவனம், எந்த நிறுவனம் எந்த இடத்தில் அதிக முதலீடுகள் செய்துள்ளது.அவை சட்டப்படிதான் நடக்கிறதா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கிறது. இந்த குறிப்பிட்ட நிறுவனம் கடந்த ஜனவரி 24ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அதானி குழுமத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது குறித்து பக்கம் பக்கமாக ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதன் காரணமாக அதானி குழும பங்குகள் ஜனவரி 24க்கு பிறகு 150பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது. 2 ஆண்டுகள் தீவிர ஆராய்ச்சிக்கு பிறகே அதானி குழுமம் பற்றி குற்றச்சாட்டுகள முன்வைப்பதாக ஹிண்டன்பர்க் தெரிவிக்கிறது. ஆனால் ஒரு குற்றச்சாட்டு கூட உண்மையில்லை என்று அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அடுத்தகட்டமாக பல்வேறு புகார்களை உள்ளடக்கிய புதிய அறிக்கையை தயார் செய்து அளிக்க இருப்பதாக ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது. இந்த முறை சிக்கப்போகும் நிறுவனம் எது, யாருக்கு மிகப்பெரிய சரிவு ஏற்படப்போகிறதோ என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய தொழிலதிபர்கள் குறித்து ஆதாரத்துடன் புகார் அளித்து வருவதால் ஹிண்டன்பர்க் அறிக்கை உலகளவில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அதானி விவகாரமே நாடாளுமன்றம் வரை சென்றுவிட்ட நிலையில், அடுத்த குற்றச்சாட்டு யார் மீது இருக்கும் என்று அரசியல் கட்சியினரும் ஒருவித அச்சத்திலேயே இருக்கின்றனர். எனினும் யார் மீதான புகார் என்பது குறித்து ஹிண்டன்பர்க் எந்த தகவலையும் வெளியிடவில்லை. விரைவில் அது வெளியாக இருப்பதால் இந்திய சந்தையிலும் ஒரு வித அச்சம் நிலவி வருகிறது.