ஏற்றத்தில் மாற்றமில்லை..போலாம் ரைட்..
வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச் சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த ஏற்றம் காணப்பட்டது. கொரோனா பரவல் உலகின் பலநாடுகளிலும் அதிகரித்து வரும் சூழலில் சீனாவில் சில கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் சாதகமான சூழல் ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 361 புள்ளிகள் உயர்ந்து 60 ஆயிரத்து 927 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 117 புள்ளிகள் உயர்ந்து 18ஆயிரத்து 132 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. கடந்த வார சரிவில் இருந்து மீள இந்திய பங்குச்சந்தைகள் முயற்சி செய்து வருகின்றன. அமெரிக்காவில் வீசி வரும் குளிர் காற்று காரணமாக கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய பங்குச்சந்தைகளில் ஹிண்டால்கோ,டாடா ஸ்டீல்,ஜெ.எஸ்டபிள்யு,உள்ளிட்ட நிறுவன பங்குகள் செவ்வாய்க்கிழமை தேசிய பங்குச்சந்தையில் லாபம் ஈட்டின. இந்துஸ்தான் யுனிலிவர்,அப்போலோ,நெஸ்ட்லே, ஐடிசி,மற்றும் என்டிபிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன, ஒட்டுமொத்தமாக செவ்வாய்க்கிழமையன்று உலோகத்துறை பங்குகள் 4% உயர்ந்து லாபத்தை பதிவு செய்தன.