கடன் விகிதத்தில் மாற்றம் இல்லை..

ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் வங்கித்துறை பரிவர்த்தனைகளை தீர்மானிப்பதில் ரிசர்வ் வங்கி எடுக்கும் முடிவுகள் மிகமுக்கியமானவை.எந்த கடனை எவ்வளவு விகிதத்துக்கு தரலாம், ஏதேனும் சலுகைகள் அறிவிக்கவேண்டுமா என்பதும் ரிசர்வ் வங்கியின் முடிவுகளில் முக்கியமானவை. இந்த நிலையில் தேவை ஏற்படும்போது ரிசர்வ் வங்கி நிதி கொள்கை குழு கூட்டத்தை நடத்தும். அந்த வகையில் கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடந்த எம்பிசி எனப்படும் நதி கொள்கைக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் வெளியிட்டுள்ளார். இதன்படி வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் கடனின் விகிதம் என்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கொரோனா காலகட்டத்தில் வெறும் 4விழுக்காடாக இருந்த ரெபோ வட்டி விகிதம், கடந்தாண்டு மே மாதத்தில் இருந்து அடுத்தடுத்து உயர்த்தப்பட்டு ஆறரை விழுக்காடாக உயர்த்தப்பட்டது. இதனால், வீடு,வாகன கடன்களை வாங்கியோருக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கடன்கள் மீதான வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக விலைவாசி உயர்வு சற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியே தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போதும் கடன்கள் மீதான வட்டிவிகிதம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி, வரும் நாட்களில் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது. பருவம் தவறி பெய்யும் மழை, அதீத வெப்பம் உள்ளிட்ட எல்நினோ விளைவுகளும் இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது. 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டு வரும் சூழலில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதால் டெபாசிட் மீதான வட்டி உயர்வும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புகளால் ஏற்கனவே வாங்கிய கடன்களின் வட்டிகள் உயர வாய்ப்பில்லை. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.