வட்டி உயர்வு இல்லை.. ஆனால்!!!!
மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கியில் கடந்த 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை நிதி கொள்கை கூட்டம் நடைபெற்றது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று பலதரப்பினரும் கணித்து வந்தனர். ஆனால் கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் ரெபோ விகிதம் எனப்படும், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அளிக்கும் பணத்தின் கடன் விகிதம் மாற்றமின்றி 6.5 விழுக்காடாகவே தொடரும் என்று ரிசர்வ்வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்தார். கடந்த மே மாதத்தில் இருந்து சுமார் 250 அடிப்படை புள்ளிகள் கடன் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியிருந்த நிலையில்,இந்த முறை ரெபோ ரேட்டில் மாற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 6.4விழுக்காட்டில் இருந்து 6.5 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 24ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி 7.8 விழுக்காடாக இருக்கும் என்றும்,இரண்டாவது காலாண்டில் 6.2% , மூன்றாம் காலாண்டில் 6.1%, 4ம் காலாண்டில் 5.9 விழுக்காடாக இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார். வளர்ந்த நாடுகளில் ஏற்பட்ட வங்கிகள் கட்டமைப்பு சிதைவு குறித்து ரிசர்வ் வங்கி தீவிரமாக உற்று நோக்கி வருவதாகவும்,இந்தியாவில் வங்கிகள் மற்றும் வங்கிகள் சார்ந்த நிதி அமைப்புகள் வலுவாக உள்ளன என்றார்.
விலைவாசியை பொறுத்தவரை இந்தியாவின் விலைவாசி என்பது உலக சந்தையை சார்ந்தே இருப்பதாகவும், ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்கிறது என்றும் அவர் பேசினார். குறிப்பிடத் தகுந்த அளவுக்கு பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு குறையும் வரையில், பணவீக்கத்திற்கு எதிரான போர் தொடரும் என்றும் சக்தி காந்ததாஸ் தெரிவித்தார். நடப்புக்கணக்கு பற்றாக்குறை என்பது 23ம் நிதியாண்டின் கடைசி காலகட்டத்தில் நிர்வகிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்துவது குறித்து கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.