திருமணமானவர்களுக்கு வேலை இல்லையா?
உலகளவில் பெரிய பிராண்டாக இருப்பது ஆப்பிள் நிறுவனம், ஆப்பிள் நிறுவன சாதனங்களை இந்தியாவில் தயாரிப்பது தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம். இந்த நிறுவனம் அண்மையில் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில் திருமணமான பெண்களுக்கு வேலை தருவதில்லை என்பதே அந்த குற்றச்சாட்டு. இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் என்ற உலகளாவிய செய்தி முகமை , கள ஆய்வு நடத்தியுள்ளது. அதில் பாக்ஸ்கான் தனது ஆலையில் பெண்களை பணிகளில் அமர்த்துவதில்லை. ஏனெனில் திருமணமான பெண்களாக இருந்தால் அவர்கள் அடிக்கடி விடுப்பு எடுப்பார்கள் என்றும், இதனால் நிறுவனத்தின் உற்பத்தி திறன் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் வேலைக்கு ஆட்களை எடுக்கும்போதே தெளிவாக திருமணம் ஆகாத பெண்களைத்தான் வேலைக்கு எடுப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது பற்றி மனிதவள பிரிவிடம் கேட்டபோது, திருமணமாகாத பெண்கள் சரியாக வேலைக்கு வருவதாகவும், திருமணமான பெண்கள் அணியும் நகைகளால் உற்பத்தி ஆலையில் பாதிப்பு ஏற்படுவதாகவும் பாக்ஸ்கான் தரப்பு விளக்கம் அளிக்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் பெண்கள் திருமணமான பிறகு அவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும் என்பதால் அவர்களை பணிக்கு எடுப்பதில் தயக்கம் இருக்கத்தான் செய்கிறது என்கிறார்கள் நிபுணர்கள், குழந்தைகள், குடும்ப பொறுப்பு என பல கட்ட கவன சிதறல்கள் தங்கள் உற்பத்தியை பாதிக்கும் என்பதாலேயே பாக்ஸ்கானில் திருமணமான பெண்களுக்கு வேலை தரப்படுவதில்லை என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். நிலைமை இப்படி இருக்கையில், பெண்களுக்கு அளிக்கப்படும் வேலை குறித்து பாக்ஸ்கான் மறுப்பும் தெரிவித்துள்ளது. சில திருமணமான பெண்களை வேலைக்கு எடுத்துள்ளோம் என்றும் விளக்கம் தெரிவித்துள்ளது. எனினும் அந்த விளக்கம் பெயரளவுக்கே இருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள்.