வீட்டு சாப்பாடா நோ நோ…!!
வீடியோகான் நிறுவனத்துக்கு சட்டவிதிகளை மீறி பெருந்தொகை கடனாக அளித்ததாக சிபிஐ வழக்குப்பதிந்துள்ள நிலையில், அதில் கைதான ஐசிஐசிஐ முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கொச்சார், அவரது கணவர் தீபக் கொச்சார் மற்றும் வீடியோகான் நிர்வாகி வேணுகோபால் தூட் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் சிறையில் உள்ள மூவரும் தனித்தனியாக சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். அதில் 3 பேருக்கும் உடல்நிலை சரியில்லை என்றும், வீட்டு உணவுகளை எடுத்து வந்து தர அனுமதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் வீட்டு உணவு அளிக்க அனுமதி மறுத்ததுடன்,சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் அதே உணவை, சிறை மருத்துவர் அனுமதிக்கும் மருந்துகளை மட்டுமே தரவேண்டும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். சந்தா மற்றும் தீபக் கொச்சார் ஆகிய 2 பேரும் கடந்த 23ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என்று 3 பேரும் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் வீட்டு உணவு, போர்வை, மருத்துவ உபகரணங்களை வீட்டில் இருந்து எடுத்து வந்து தர அனுமதி கோரிய நிலையில் அனைத்து கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டன. பைகல்லாவில் உள்ள பெண்கள் சிறையில் சந்தாவும், ஆர்த்தர் ரோடு பகுதியில் உள்ள சிறையில் தீபக் மற்றும் வேணுகோபால் தூட் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.