வாடகை தரல.. ஆபிசை காலி செய்யும் டிவிட்டர் …
உலகத்திலேயே பெரிய பணக்காரராக வலம் வரும் எலான் மஸ்க் தனது அலுவலக கட்டடத்துக்கு வாடகை கட்டவில்லை என்றால் நம்ப முடிகிறதா.? ஆம் நம்புங்கள் இதுதான் நிஜம். அமெரிக்காவின் கோலராடோ பகுதியில் மஸ்கின் டிவிட்டர் நிறுவனம் எக்ஸ் கார்ப் என்ற பெயரில் வாடகைக்கு குடியிருந்து வருகிறது. இந்த கட்டடத்தின் உரிமையாளருக்கும் மஸ்கின் நிறுவனத்துக்கும் வாடகை ஒப்பந்தம் இருந்து வருகிறது.போதுமான வாடகை தரவில்லை என்று மஸ்கின் நிறுவனத்தின் மீது நில உரிமையாளர் ஜான் பக் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2020 முதல் இதுவரை 9லட்சத்து 68 ஆயிரம் டாலர் பணம் தரவேண்டியதற்கான கடிதமும் மஸ்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. வண்டியும் விடமாட்றான்,வாடகையும் தரமாட்றானே என வடிவேலு நகைச்சுவை காட்சியைப்போல கட்டட உரிமையாளரை மஸ்கின் நிறுவனம் அலைக்கழிப்பதால் கடுப்பான ஓனர்,நிறுவனத்தை காலி செய்ய சட்டப்போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக டிவிட்டர் நிறுவனம் குறிப்பிட்ட கட்டடத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று நீதிமன்றமும் ஆணையிட்டது. இதேபாணியில் ஏற்கனவே ஒரு அலுவலகத்திலும் வாடகை பாக்கி இருப்பதால் டிவிட்டர் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு வருகிறது. 12 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனில் டிவிட்டர் நிறுவனம் உள்ளது. 2 பில்லியன் அமெரிக்க டாலர் விளம்பர இழப்பையும் மஸ்க் சந்தித்து வருவதால் டிவிட்டர் நிறுவனம் மிகவும் பரிதாபகரமான கடன் சிக்கலில் தவித்து வருகிறது என்றே கூற வேண்டும்.