14,000 பேரை வேலையை விட்டு தூக்கும் நோக்கியா…
பெரிதாக லாபம் வரும்போது ஊழியர்களை கண்டுகொள்ளாத பெரிய நிறுவனங்கள், நஷ்டம் வரும்போது மட்டும் முதலில் கத்திவீசுவது ஆட்களின் சம்பளம் மற்றும் ஆட்குறைப்பில்தான்.பின்லாந்தை பூர்விகமாக கொண்டு இயங்கும் நிறுவனம் நோக்கியா.இந்த நிறுவனத்துக்கும் இந்தியர்களுக்கும் அத்தனை பெரிய பந்தம் எப்போதும் உண்டு. இந்த நிலையில் கடும் நிதி நெருக்கடியால் சிக்கித்தவித்து வரும் நோக்கியா தனது அடுத்த முயற்சியாக 14,000 பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் 5ஜி தொடர்பான உபகரணங்கள் விற்பனை சரிந்ததே நோக்கியாவின் இந்த ஆட்குறைப்பு முடிவுக்கு முக்கிய காரணமாகும்.2026ஆம் ஆண்டுக்குள் 800 மில்லியன் யூரோ முதல் 1.2 பில்லியன் யூரோ வரை பணத்தை மிச்சப்படுத்தும் முயற்சியில் நோக்கியா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. நோக்கியா நிறுவனத்தில் மொத்தம் 86 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர்,அதனை 72 ஆயிரமாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.3ஆவது காலாண்டில் 467மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானத்தை அந்த நிறுவனம் பார்த்துள்ளது. ஏற்கனவே எடுத்த சிக்கன நடவடிக்கையால் 24.6 பில்லியன் யூரோக்கள் மிச்சமாகியிருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில்பார்செலோனாவில் நடந்த மொபைல் உலக காங்கிரஸ் நிகழ்ச்சியில் நோக்கியா தனது புதிய லோகோவை அறிமுகப்படுத்தியது. எரிக்சன் நிறுவனத்தின் போட்டி காரணமாக நோக்கியாவின் பொருட்கள் அதிகளவில் விற்கவில்லை என்பதே நோக்கியா சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.ஐரோப்பிய நிறுவனங்கள் மற்றும் அமெரிக்காவில் 5ஜி தொடர்பான உள்கட்டமைப்புகளை நோக்கியா பெருமளவு குறைத்து வருகிறது.