“ஒழுங்குமுறைப்படுத்தப்படாத “டெரிவேட்டிவ்” நிதித்திட்டங்களில் வர்த்தகம் செய்ய வேண்டாம்” – பங்குச் சந்தை வணிகர்களுக்கு, இந்திய பங்குச் சந்தைகள் விடுக்கும் எச்சரிக்கை
“டெரிவேட்டிவ்” என்பது சொத்து, குறியீடு, பொருள் அல்லது வட்டி போன்றவற்றின் அடிப்படையிலான சந்தை செயல்திறனில் இருந்து அதன் மதிப்பைப் பெறும் ஒரு ஒப்பந்தமாகும். இந்தியாவின் முன்னணி பங்குச் சந்தைகளான தேசிய பங்குச் சந்தையும், மும்பை பங்குச் சந்தையும் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத டெரிவேட்டிவ் நிதித்திட்டங்களில் வர்த்தகம் செய்ய வேண்டாம் என எச்சரித்திருக்கிறது, குறிப்பாக “பைனரி ஆப்ஷன்ஸ்” மற்றும் “காண்ட்ராக்ட்ஸ் ஃபார் டிஃபரென்ஸ்” (CFD) போன்ற திட்டங்களை குறித்து பங்குச் சந்தைகள் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கின்றன. வழக்கமான பங்குச் சந்தையில் பரிவர்த்தனை செய்யப்படும் சந்தைக் கட்டுப்பாட்டாளர்களின் ஒப்புதல் பெற்ற முதலீடுகள் மற்றும் வர்த்தகம் தவிர்த்த “பைனரி ஆப்ஷன்ஸ்” மற்றும் “காண்ட்ராக்ட்ஸ் ஃபார் டிஃபரென்ஸ்” (CFD) போன்றவை முறைப்படுத்தப்படாதவை மட்டுமின்றி இந்திய சந்தையில் பரிவர்த்தனை செய்யப்படுவதில்லை.
“இத்தகைய பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வலைத்தளங்கள் / தளங்கள் மூலம் விளம்பரம் செய்யப்படும் அதிக வருமான வாக்குறுதிகளுக்கு பலியாகி இறுதியில் இதில் முதலீடு செய்வோர் பணத்தை இழக்கக்கூடும்,” என்று NSE அதன் செய்திக் குறிப்பில் கூறியிருக்கிறது. ஆகவே, முதலீட்டாளர்கள் அத்தகைய முறைப்படுத்தப்படாத இணைய அடிப்படையிலான வர்த்தக தளங்களால் வழங்கப்படும் “காண்ட்ராக்ட்ஸ் ஃபார் டிஃபரென்ஸ்” (CFD) மற்றும் “பைனரி ஆப்ஷன்ஸ்” போன்ற கட்டுப்பாடற்ற திட்டங்களை பரிவர்த்தனை செய்வதையும், முதலீடு செய்வதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.” NSE மற்றும் BSE பங்குச் சந்தைகள் திங்களன்று இதனைத் தனித்தனி செய்திக் குறிப்பாக வெளியிட்டன. CFDs என்பது ஒரு தரகருக்கும் முதலீட்டாளருக்கும் இடையிலான ஒப்பந்தமாகும், இது குறிப்பிட்ட கால இடைவெளியில் வேறுபாட்டு நிதியை வழங்கும் திட்டம்.
இது ஒரு குறிப்பிட்ட நிதித் திட்டத்தை சொந்தமாக வைத்துக் கொள்ளாமல் சந்தையில் பந்தயம் கட்ட அனுமதிக்கிறது. முதலீட்டாளர்கள் விலை மாற்றங்களின் அடிப்படையில் பணத்தை சம்பாதிக்கிறார்கள் அல்லது இழக்கிறார்கள். ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைத் திட்டங்களோடு ஒப்பிடும்போது இந்த வகைத் திட்டங்கள், உலகின் எந்த இடத்திலும் பங்குகள், சந்தைக் குறியீடுகள், நாணயங்கள் மற்றும் பொருட்களின் மீது குறைந்த செலவில் பந்தயம் கட்டுவதற்கு அனுமதிக்கின்றன.
CFD க்கள் மற்றும் பைனரி திட்டங்களில் வர்த்தகம் செய்வது மிகப்பெரிய ஆபத்து, இவை பரிமாற்றங்கள் மற்றும் சந்தை நெறிப்படுத்தும் அமைப்புகளால் அங்கீகரிக்கப்படாத தனியாரால் நேரிடையாக நடத்தப்படும் “ஓவர் தி கவுண்டர்” (ஓ.டி.சி) திட்டங்களாகும், இந்திய சந்தையில் நெறிப்படுத்தப்படாதவை என்று தரகர்கள் கூறுகிறார்கள். இதன் பொருள், ஒரு CFD தளத்தில் திவாலாகும் ஆபத்து அதிகமாக உள்ளது, இதன் மூலம் ஒரு முதலீட்டாளர் தனது பணத்தை பெருமளவில் இழக்க நேரிடும்.
மிக அதிகமான லாபமீட்டும் காரணத்தால் இந்த வகைத் திட்டங்கள் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பிரபலமடைந்து வருவதாகவும் தரகர்கள் தெரிவித்தனர். மேலும், இந்தத் தளங்களில் பெரும்பாலானவை வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகளுக்கு நிதியுதவி அளிக்கின்றன. இந்தியாவில் CFD க்கள் அனுமதிக்கப்படவில்லை, ஆனால் இந்த வகைக் கணக்குகள் தரகர்கள் மூலமாக வெளிநாடுகளில் திறக்கப்படுவதால், இந்த நிறுவனங்கள் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்த சேவைகளைத் தொடர்ந்து வழங்குகின்றன. இதே போலவே, பைனரி திட்டங்கள் சமீபத்திய மாதங்களில் பிரபலமடைந்து வரும் இன்னொரு வகையாகும். இந்தத் திட்டத்தில், லாபம் ஒரு நிலையான தொகையாகவும் இருக்கலாம் அல்லது எதுவுமில்லாமல் போகலாம். திட்டத்தின் காலம் முடிவடையும் போது விலை உயர்வு இருக்கும் பட்சத்தில் வர்த்தகம் செய்பவர்கள் பணம் ஈட்டுகிறார்கள், விலை குறைந்திருக்கும் போது திட்டத்தின் காலம் முடிவடைந்தால் பணத்தை இழக்கிறார்கள்.
முறைப்படுத்தப்பட்ட வழக்கமான நிதித் திட்டங்களில் ஈட்டப்பட்ட லாபம் அல்லது இழந்த பணமானது முதலீட்டாளர்கள் நிஃப்டி குறியீடு அல்லது பங்குகளின் செயல்திறனுக்கு ஏற்றபடி எப்படிப் பரிவர்த்தனை செய்தார்கள் என்பதைப் பொறுத்தது. ஆனால் பைனரி திட்டங்களில், முதலீட்டாளர் அல்லது வர்த்தகம் செய்பவர் பிரீமியம் / இலாபம் அல்லது இரண்டையும் இழக்க நேரிடுகிறது. பங்குகளின் செயல்திறனுக்கு ஏற்ற நஷ்டம் அல்லது இலாபம் என்ற விஷயம் இந்தத் திட்டங்களில் இல்லை. உலகெங்கிலும் உள்ள சந்தை கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சந்தை ஆய்வு நிறுவனங்கள் CFD மற்றும் பைனரி திட்டங்களின் வளர்ச்சியை கவலையோடு பார்க்கிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.