அக்டோபர் கடைசியில் ஓலா ஐபிஓ?
இந்தியாவின் பிரபல மின்சார ஸ்கூட்டர்கள் தயாரிக்கும் நிறுவனமான ஓலா நிறுவனம் தனது ஆரம்ப பங்கு வெளியீட்டை வரும் அக்டோபர் மாத இறுதியில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டை பெற ஓலா நிறுவனம் பணிகளை செய்து வருகிறது.சிங்கப்பூரின் டெமாசெக்,ஜப்பானின் சாஃப்ட்பேங்க் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து முதலீடாக 5.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஓலா நிறுவனம் பெற்றுள்ளது. தற்போது பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வரும் ஐசிஐசிஐ,கோட்டக் ஆகிய வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கி நிறுவனங்களான பேங்க் ஆப் அமெரிக்கா,கோல்ட்மேன் சாச்ஸ் ஆகியவற்றிற்கும் ஓலா நிறுவனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மின்னஞ்சல் மூலம் ஐபிஓ குறித்து தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அடுத்த 5 வாரங்களுக்குள் எஞ்சியுள்ள பரிவர்த்தனைகளை முடிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.இந்த திட்டத்துக்கு ஹிமாலயா திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.பவிஷ் அகர்வாலால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இந்திய மின்சார ஸ்கூட்டர்களில் 30விழுக்காடு பங்களிப்பை தந்துகொண்டிருக்கிறது.டெஸ்லா நிறுவனம் மேற்கத்திய நாடுகளுக்கு இருக்கட்டும்,மற்ற அனைத்து இடங்களுக்கும் ஓலா இருக்கட்டும் என்று கடந்தாண்டு ஒரு பேட்டியில் பவிஷ் கூறியிருந்தார். இந்த நிலையில் தனது வியாபாரத்தை அதிகரிக்க ஓலா கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.136 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பில் உள்ள இந்த நிறுவனம் ஒரு நிதியாண்டில் மட்டும் 335 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணப்புழக்கத்தை செய்திருக்கிறது.