ஒரு நாள் கார் வாடகை 1 லட்சம் ரூபா..
உலகளவில் முக்கியமான 20 நாடுகளின் கூட்டமைப்பு ஜி20 என்று அழைக்கப்படுகிறது. இந்த கூட்டமைப்பின் உச்சிமாநாட்டை இந்தியா இந்தாண்டு தலைமை ஏற்று நடத்துகிறது. இந்த உச்சிமாநாட்டுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் இதற்கான சிறப்பு அலங்காரம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் நடசத்திர விடுதிகளில் தங்கும் வாடகை அறைகள் மற்றும் சொகுசு கார்கள் வாடகை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. வெளிநாட்டு பிரதிநிதிகளை அழைத்து வர சொகுசு கார்களுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது. குறிப்பாக மெர்சிடீஸ் Maybach ரக கார்களுக்குத்தான் அதிக கிராக்கி உள்ளது. BMW,அவ்டி ரக கார்களுக்கும் தேவை அதிகரித்துள்ளதாக கார்களை வாடகைக்கு விடும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. வழக்கமாக ஒரு நாளைக்கு ஓரளவு நாகரீகமான விலைக்கு வாடகைக்கு விடப்படும் நிலையில், தற்போது 8 மணி நேரத்துக்கு 60,000 ரூபாயும், ஒரு நாள் வாடகையாக 1 லட்சம் ரூபாயும் சார்ஜ் செய்கிறார்களாம். இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினருக்கு உதவும் வகையில்,ஓட்டுநர்களுக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி பேசவும் கற்றுத்தரப்படுகிறதாம். உலக உள்நாட்டு உற்பத்தியின் மொத்தத்தில் இந்த நாடுகள் மட்டும் 85% பங்களிப்பை செய்கின்றனர்.உலக மக்கள் தொகையில் 75% பேருக்கான வணிகத்தை இந்த 20 நாடுகள்தான் செய்கின்றன. டெல்லி மற்றும் குருகிராமில் மட்டும் 3,500 நட்சத்திர ஹோட்டல்கள் வெளிநாட்டினருக்காக நிரம்பி வழிகின்றன. ஜி20 மாநாடு நடைபெறும் செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதி மட்டும் 160 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 123 ஏக்கரில் டெல்லியில் பிரகதி மைதானம் பகுதியில் 2,700 கோடி ரூபாய்க்கு பிரத்யேக அரங்கு இதற்காக கட்டப்பட்டுள்ளது.