முன்னணி IT நிறுவனங்களில் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு !
ஐடி துறையில் கொடிகட்டி பறக்கும் நிறுவனங்களான விப்ரோ, டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்கள் இந்த ஆண்டு 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக, தெரிவித்துள்ளன.
கவர்ச்சிகரமான சம்பளத்துடன் காத்திருக்கும் வேலைவாய்ப்பு:
நடப்பு நிதியாண்டில் ஐடி துறையில் இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் காத்து கொண்டுள்ளது. இன்ஃபோசிஸ். டிசிஎஸ். விப்ரோ ஆகிய நிறுவனங்கள் கவர்ச்சிகரமான ஊதியத்துடன் புதிய இளைஞர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளன. 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட 3-ம் காலாண்டு முடிவுகளின்போது இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகின.
1 லட்சம் பேருக்கு வேலை தரும் டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ்:
கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த மூன்று நிறுவனங்களுமே கடந்த 2021-ம் ஆண்டு 1.7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை அளித்திருந்தனர். இந்நிலையில், நடப்பு ஆண்டில் 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளன. 55 ஆயிரம் இளையதலைமுறையினருக்கு பணி வழங்க திட்டமிட்டுள்ளதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. டிசிஎஸ் எனப்படும் டாடா கன்சல்டன்சி நிறுவனம் இந்த ஆண்டு புதியவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஆனால் எத்துனை பேருக்கு வேலை என்ற அறிவிப்பை வெளியிடவில்லை. விப்ரோவை பொறுத்தவரை 30 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளது. இதில் 70% பேர் கேம்ப்பஸ் இன்டர்வியூ மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் விப்ரோ தெரிவித்துள்ளது. கொரோனா, ஒமிக்ரான் அச்சுறுத்தல்களால் பலரும் வேலையின்றி தவித்து வரும் நிலையில், ஐடி ஜாம்பவான்களுடைய இந்த அறிவிப்பு இளைஞர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.