அமலுக்கு வந்தது ஒரு வாகனம்,ஒரு பாஸ்ட் டேக் நடைமுறை..
மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஒரு வாகனம் ஒரே பாஸ்ட் டேக் என்ற புதிய முறையை இன்று ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டுவந்துள்ளது. ஒரே பாஸ்ட் டேகை பயன்படுத்தி பல வாகனங்களை இயக்குவதை தடுக்கும் நோக்கில் இந்த புதிய முறை அமலாகியுள்ளது. பேடிஎம் நிறுவனம் வழங்கிய பாஸ்ட் டேக்களை மாற்றுவதில் பல வாடிக்கையாளர்களுக்கு சிக்கல் இருந்ததை அடுத்து கேஒய்சி என்ப்படும் வாடிக்கையாளர் விவரங்களை பதிவு செய்ய அவகாசம் மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவகாசம் முடிந்த நிலையில் ஒரு பாஸ்ட் டேக், ஒரே வாகனம் என்ற புதிய திட்டம் அமலுக்கு வந்து விட்டது. இதனால் ஒரே வாகனத்துக்கு பல பாஸ்ட் டேக் அட்டைகள் இருந்தால் ஏதேனும் ஒன்று மட்டுமே செல்லும். சுங்கச்சாவடிகளில் கூட்ட நெரிசலை குறைக்கவும், பல வாகனங்களுக்கு ஒரே பாஸ்ட்டேக்பயன்படுத்துவதை முழுமையாக ஒழிக்கவும் இந்த முறை வந்துள்ளதாக NHAIஅதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 98 விழுக்காடு வாகன ஓட்டிகளிடம் பாஸ்ட் டேக் அட்டைகள் உள்ளன. மொத்த எண்ணிக்கை 8 கோடி பாஸ்ட் டேக்கள் இதுவரை பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறையை தலைகீழாக பாஸ்ட் டேக் முறை கொண்டு வந்துள்ளது. RFID எனப்படும் ரேடியோ பன்பலைகள் அடிப்படையில் இந்த பாஸ்ட் டேக் அட்டைகள் சுங்கச் சாவடிகளில் இயங்கிவருகிறது. வாகன பாஸ்ட் டேகுகளுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக்கணக்குகளில் இருந்து பணம் எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.