வெங்காயம் ஏற்றுமதி – வியாபாரிகள் கடும் எதிர்ப்பு..
இந்தியா மட்டுமின்றி ஆசியாவிலேயே பெரிய வெங்காய மண்டி மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகே லசல்கான் என்ற பகுதியில் இருக்கிறது.இவர்கள் திடீரென வேலைநிறுத்தப்போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதற்கு காரணம் என்னவென்றால், அண்மையில் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40% ஏற்றுமதி வரியை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கத்தான் சந்தையை வணிகர்கள் அடைத்துள்ளனர். இதனால் நாசிக் சுற்றுவட்டாரங்களில் எங்கும் வெங்காய விற்பனை நடைபெறவில்லை. வெங்காயம் சார்ந்த வணிகம் செய்யும் அனைத்து பிரிவினரும் தங்கள் பணிகளை நிறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டின் மூத்த அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்து வருவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.வெளிநாடுகளில் இருந்து பால் மற்றும் தக்காளிகளை இறக்குமதி செய்ததில் இருந்து,தற்போது ஏற்றுமதி வரி அதிகரித்துள்ளது வரை விவசாயிகளின் நலனுக்கு எதிராகவே அரசாங்கம் செயல்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். வெங்காயத்தின் ஒரு கிலோ விலை சராசரியாக 67 ரூபாயாக உயர்ந்துள்ளது. நிலைமை இப்படி இருக்கையில் விவசாயிகளை இந்த விலை பாதிக்காது என்று கூறியுள்ள நுகர்வோர் விவகாரங்கள்துறை செயலர்ரோஹித் குமார் சிங்,வெளி சந்தையில் சில்லறை விலையில் மக்களுக்கு எளிதாக கிடைக்கவே இந்த பணிகளை செய்வதாக கூறியுள்ளார். ஆனால் வெங்காய ஏற்றுமதியாளர்களை மத்திய அரசின் இந்த புதிய வரி விதிக்கும் முறை வெகுவாக பாதிக்கும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு ஏற்றுமதி வரியை மறுபரிசீலனை செய்யலாம் என்று வணிக அமைப்புகள் தெரிவித்துள்ளன. வெங்காய வணிகம் செய்யும் 10-15 அமைப்புகள் இணைந்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். உதாரணமாக 25 ரூபாய்க்கு ஒரு கிலோ வெங்காயத்தை ஏற்றுமதி செய்தால் அதில் 40%அரசாங்கத்துக்கே தரவேண்டும் என்றால் ஒரு கிலோ 15 ரூபாய்க்குத்தான் விற்க முடியும் என்றும்,அப்படியானால் விவசாயிகளிடம் இருந்து 10 ரூபாய்க்குத்தான் வாங்க நேரிடும் என்றும்,இது உற்பத்தி கூலிக்கு கூட கிடைக்காது என்கிறார்கள் வணிகர்கள். மகாராஷ்டிரா,கர்நாடகத்தில் வட்டவட்டமாக மழைபெய்ததாகவும்,இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,10 வருடங்களுக்கு முன்பு 10 ரூபாய் விற்ற வெங்காயம் இப்போதும் அதே விலைக்கு விற்றால் எப்படி கட்டுப்படியாகும் என்றும், உரம், மற்ற செலவுகளுக்கு யாரை கேட்பது என்றும் வெங்காய விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான்,ஈரான்,எகிப்து வெங்காய உற்பத்தியாளர்களுக்குத்தான் கொள்ளை லாபம் கிடைக்கும் என்றும் வெங்காய ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்