சதமடித்து அழவைக்கும் வெங்காயம்..
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. இது டெல்லியில் மட்டுமல்ல,நாட்டின் முக்கியமான நகரங்களிலும் இதே நிலைதான். கடந்த சிலவாரங்களாக 30 முதல் 50 ரூபாயாக விற்கப்பட்டு வந்த வெங்காயம் தற்போது கிலோ 70 முதல் 80 ரூபாயாக உள்ளது. நவம்பர் முதல் வாரத்தில் இந்த விலை நூறு ரூபாயை எட்டும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். உற்பத்தி குறைவு, விநியோக தட்டுப்பாடு உள்ளிட்ட காரணிகளால் இந்த விலை ஏற்றம் காணப்படுகிறது.மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வழக்கமாக வரும் வெங்காயத்தின் அளவு குறைந்திருப்பதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. நவராத்திரி முடிந்ததும் வெங்காயத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் இருந்து பெரும்பாலான வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில்,வெங்காயத்தின் விலை 50%உயர்ந்திருக்கிறது. கடந்த1 ஆம் தேதி 2506 ரூபாயாக இருந்த ஒரு குவிண்டால் வெங்காயம் அக்டோபர் 26ஆம் தேதி 3126 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. டிசம்பரில் புதிய வெங்காய அறுவடை நடைபெறும் என்பதால் டிசம்பர் மாதம் வரை வெங்காயத்தின் விலை உயர்ந்தே காணப்படும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தான் மத்திய அரசு விவசாயிகளிடம் இருந்து 2 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்து சேமித்து வைத்திருக்கிறது. தேவைப்படும் நேரத்தில் நேரடியாக மக்களிடமே விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது மத்திய அரசிடம் வெங்காயம் கைவசம் 5 லட்சம் டன்னாக இருக்கிறது.மத்திய அரசு தனது கிடங்கில் வைத்துள்ள வெங்காயத்தை மக்களுக்கு கிலோ 25 ரூபாய் முதல் விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.